Published : 11 Mar 2019 09:41 AM
Last Updated : 11 Mar 2019 09:41 AM

பிரான்ஸ் பிரதிநிதியை வெளியேற்றும் உத்தரவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரான்ஸ் நாட்டின் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதி, 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதியும், அரசியல் விமர்சகருமான அந்தோனிருசேல் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு 6 மாத கால சுற்றுலா விசாவில் வந்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு நேற்று மதியம் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற இருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.அப்போது வல்லம் டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் அங்கு வந்த போலீஸார், ‘அந்தோனிருசேல் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என அயல்நாட்டு வருகைப் பதிவு அலுவலரும், தஞ்சாவூர் எஸ்பியுமான மகேஸ்வரன் மூலம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கூறி, அவரை வெளியேற கேட்டுக்கொண்டனர்.இதையடுத்து அந்தோனிருசேல் கார் மூலம் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் தூதகரத்தில் முறையிட புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து  முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியது: முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கலந்துரையாடல் கூட்டத்தில்தான் அவர் பங்கேற்க இருந்தார். ஆனால் அவரை எதற்காக இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என தெரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேண்டாத எதிர்விளைவுகளையே இது ஏற்படுத்தும் என்றார். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற இருந்த கலந்துரையாடல் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x