

எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர் ஷிஷிர் மாலின் மனைவிக்கு ராணுவ அகாடமியில் பயிற்சி அளித்து உரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாரமுல்லா செக்டரில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர் ஷிஷிர் மால். கடந்த செப்டம்பரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ஷிஷிர் மால் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார்.
ஷிஷிர் மால் தனது வீரதீர செயல்களுக்காக கடந்த 2016ல் சேனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் மனைவி சங்கீதா மால் தற்போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ராணுவத்தில் அவருக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த ராணுவ வீரர் ஷிஷிர், சங்கீதா மாலை 2013ல் திருமணம் செய்துகொண்டார். அப்போது சங்கீதா ஒரு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தனது நீண்ட கால ஆசிரியை பணியை கணவர் உயிரிழந்ததுடன் கைவிட்டார்.
இந்நிலையில் சங்கீதா மாலை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கும் ஆர்வமும் தகுதியும் இருந்ததால் ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக் காலக்கட்டத்தில் அவரது ராணுவத்தின்மீதான அவரது ஆர்வமும் திறமையும் நன்கு வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
சங்கீதா மாலுக்கு உரிய பயிற்சிக்காலம் முடிந்தவுடன் நேற்று (திங்கட்கிழமை) அவர் சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் பயிற்சிக் கல்லூரிலிருந்து வெளியேறினார். வெளியேறிய கையோடு அவருக்கு ஆர்மி லெப்டினென்ட் எனப்படும் உயரிய ராணுவ துணைத்தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.