

திமுகவினர் கொள்கையும் கோட்பாடும் இல்லாதவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இதற்காக பழனி பகுதியில் ஜோதிமுத்துவுக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அவருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ''பல இடங்களில் இதுகுறித்துச் சொல்லியிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடும் திமுகவின் அத்தியாயம் இத்துடன் முடியப்போகிறது. தேர்தல் நேரத்தில்தான் அவர்களைப் பார்க்கிறீர்கள். அடுத்து இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு கொள்கையும் கிடையாது. கோட்பாடும் கிடையாது'' என்றார் ராமதாஸ்.
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ''மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி அதற்கு உரிமை கொண்டாடினார். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க 14 மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாகக் கொண்டு வந்து புரட்சி செய்தவர் அன்புமணி ராமதாஸ்'' என்றார் சீனிவாசன்.