Last Updated : 28 Sep, 2014 01:33 PM

 

Published : 28 Sep 2014 01:33 PM
Last Updated : 28 Sep 2014 01:33 PM

லில்லி தாமஸ் வழக்கில் 10.7.2013-ல் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கியத்துவம்

கடந்த 10.7.2013 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களில் யாரேனும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால், அவர்கள் உறுப்பினர் தகுதியை இழப்பது பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டப் பிரிவுகளின்படி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்சினையால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டவர்கள், தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்பு, பலாத்காரம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றம், மக்களிடையே மத வேற்றுமையை தூண்டி கலவரம் ஏற்படுத்துவது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், தேர்தலின்போது வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குச் சீட்டுகளை அள்ளிச் செல்லுதல் போன்ற குற்றங்கள் மற்றும் ஊழல், முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக பதவியில் தொடர முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8-ல் அடங்கியுள்ள (1), (2), (3) ஆகிய உட்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், தண் டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண் டனை முடிந்த பிறகும் அடுத்த 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டி யிட முடியாது என இந்த பிரிவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனினும் தண்டனை பெற்றாலும் கூட, உடனே பதவி இழக்காமல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் விதத்தில் அதே 8-வது பிரிவின் (4)-வது உட்பிரிவு பாதுகாப்பு அளித்து வந்தது. அதாவது, விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து அடுத்த 90 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்யும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை இழக்க மாட்டார்கள் என்று அந்த உட்பிரிவில் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டப் பிரிவு தந்த பாதுகாப்பால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (4) பிரிவு, அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என அறிவிக்கக் கோரி கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் லில்லி தாமஸ், எஸ்.என்.சுக்லா என்ற 2 பேர் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 10.7.2013 அன்று பிறப்பித்தது. அதாவது, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (4)-வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும், அந்த சட்டப்பிரிவு செல்லாது என்றும் பிரகடனம் செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த பிரகடனத்தால் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் ஏற் கெனவே பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இப்போது சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை ஜெயலலிதா இழந்துள்ளார்.

முதலில் பதவி இழந்த ரஷீத் மசூத்

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், பதவி இழந்த முதல் நபர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூத். 1990-91ல் வி.பி.சிங் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த அவர், திரிபுரா மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். இடம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் உடனடியாக எம்.பி. பதவியை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஆர்.ஜே.டி. கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜகதீஷ் சர்மா ஆகியோர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தகுதியை 21.10.2013 அன்று இழந்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் பதவி இழந்த முதல் மக்கள் பிரதிநிதி திமுகவைச் சேர்ந்த டி.எம்.செல்வகணபதி ஆவார். கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதி மீது சுடுகாட்டு கூரை அமைப்பதில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பின் காரணமாக செல்வகணபதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழந்தார். அவர் திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x