Published : 08 Sep 2014 10:30 AM
Last Updated : 08 Sep 2014 10:30 AM

வேட்புமனு தாக்கல் தொடர்பான புகார்கள்: அறிக்கை அளிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம் தகவல்

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பாக பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்துள்ள புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணைய செயலர் பா.ஜோதி நிர்மலா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யரை சந்தித்து மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் மாநில தேர்தல் ஆணையரிடம் ஒரு மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை குறித்தும், குன்னூர் நகராட்சியில் வேட்புமனு பரிசீலனையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்தும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில இடங்களில் எந்தக் காரணமும் இன்றி வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்தும் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியைப் பொறுத்தவரை யாரிடமிருந்தும் புகார்கள் வராத நிலையில், செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அந்த மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரி பெறப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் யாரையும் யாரும் தடுக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் மறியல் செய்வதில் காட்டிய அக்கறையை மனு தாக்கல் செய்வதில் காட்டவில்லை என்று ஆட்சியர் அறிக்கை மூலம் தெரியவருகிறது.

பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு ஆட்சியர்களால் அளிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்தச் செய்தியில் ஜோதி நிர்மலா தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்படவேண்டும்

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்ட அறிக்கை:

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையரிடம் கடந்த 6-ம் தேதி மாலை ஒரு மனு அளித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு பாஜக வேட்பாளர் பிரபாகரன் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரித்து ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பவேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, விழுப்புரம் ஆட்சியரும் காவல் கண்காண்ணிப்பாளரும் விசாரணை அறிக்கையை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். அதில், ‘காணாமல் போனதாக சொல்லப்பட்ட பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் புகார் கொடுக்கவில்லை. பிரபாகரனே காவல் நிலையத்துக்கு வந்து, என்னை யாரும் கடத்தவில்லை. பாஜகவை சேர்ந்தவர்கள் பொய்யான புகார் அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

எனவே, அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது பொய்யான தகவல் என கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புகார் அளிக்கும் முன்பும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும்போதும் சம்பந்தப்பட்ட செய்தி உண்மையா என விசாரித்து அறிந்து அதன்பிறகு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x