

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவுக்கு நாட்டுப்படகுகளில் மீனவர்கள் செல்ல அனுமதி மறுப்பது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவுக்கு நாட்டுப்படகுகளில் மீனவர்களை அனுமதிக்கக்கோரி திருவாடனை திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஆண்டில் உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அடுத்த ஆண்டு முதல் (2019) கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு மோட்டர் பொருத்திய நாட்டுப்படகில் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் மீனவர்கள் செல்ல அனுமதிக்க மறுப்பதால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.