Last Updated : 18 Mar, 2019 07:39 AM

 

Published : 18 Mar 2019 07:39 AM
Last Updated : 18 Mar 2019 07:39 AM

மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அஞ்சல் துறையில் சிறப்பு பயிற்சி: மார்ச் 31-க்குள் 250 பேரை சேர்க்க இலக்கு நிர்ணயம்

அஞ்சல் துறையில் தற்காலிக அடிப்படையில் வேலை செய்வதற்கு மீனவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை நகர மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில், மீனவப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒரு சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை நகர மத்திய மண்டல அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பு அதிகாரி அலோக் ஓஜா ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

ஏழை மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அவர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி பொருளாதாரச் சுதந்திரம் அடைவதே இதன் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில், அஞ்சல்துறை ஒரு முன்னோடி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு அஞ்சல் துறையில் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக நொச்சிக்குப்பம், ராயபுரம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த15 மீனவப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அஞ்சல் உறைகளை மடிப்பது, அஞ்சல் உறைகள் மீது முகவரியை ஒட்டுவது, ஸ்டாம்ப் ஒட்டுவது, அஞ்சல் கடிதங்கள் அடங்கிய பைகளை கட்டுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

மயிலாப்பூர் மற்றும் தி.நகரில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு அஞ்சல் நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் மேற்கண்ட பணிகள் வழங்கப்படும். அவர்கள் செய்யும் பணியின் அளவுக்கேற்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை கூட அவரவர் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.

இப்பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதும் கிடையாது. எனினும், அவர்கள் இப்பயிற்சியை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. அவர்கள் உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு எவ்வளவு வயது வரையிலும் பணி செய்யலாம்.

மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுடைய வாழ்க்கை, கலாச்சாரம், அணுகுமுறை மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை மாற்ற இப்பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்.

நிதி அதிகாரம்

அத்துடன், அஞ்சல்துறையில் செயல் படுத்தப்பட்டு வரும் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி அறிந்து கொண்டு அதில் சேருவதோடு, அவை குறித்து பிறருக்கும் எடுத்துக் கூறுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைப்பதோடு, நிலையான வருமானம் பெறுவதன் மூலம் நிதி அதிகாரமும் கிடைக்கிறது. மேலும், இப்பெண்கள் தங்களுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் அரசு வேலையில் சேர்க்க ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் 250 பெண்களுக்கு இப்பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியைப் பொறுத்து இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அலோக் ஓஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x