Published : 23 Mar 2019 07:49 AM
Last Updated : 23 Mar 2019 07:49 AM

புவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை; மாநிலத்தில் முதன்முறையாக நெல்லையில் அறிமுகம்

தமிழகத்தில் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தகவலியல் மையத்தின் சார்பில், தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பின் மூலம் (Tamil Nadu Geographical Information System TN-GIS) அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் குறிப்பிடும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதன்தொடர்ச்சியாக தற்போது மாநிலத்திலேயே முதன்முறையாக தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்ட புவிசார் தகவல் அமைப்பு என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாவட்டத் திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளையும் எளிதில் கண்காணிக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:

வரைபடங்களை பார்த்துக் கொள்ளலாம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 2,979 வாக்குச்சாவடிகளின் புவிசார் குறியீடான தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை ஆகிய அளவுகளைப் பயன்படுத்தி, தேசிய தகவல் மையத்தின் புவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளின் புவியியல் அமைப்பை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மக்களவை தொகுதிக்கான முழு வரைபடம், சட்டப் பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய வரைபடங்களையும் எளிதில் பார்த்துக் கொள்ளலாம்.

மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அவற்றினுடைய ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கை போன்ற அடிப்படை விவரங்களுடன், அவை பதற்றமான வாக்குச்சாவடியா என்ற முக்கிய விவரங்களையும் இதில் தொகுத்து கொடுத்துள்ளோம்.

வாக்குச்சாவடியின் அமைவிடம், அதைச்சுற்றியுள்ள தேசிய, மாநில மற்றும் மாவட்டச் சாலை அமைப்புகள், ரயில் வழித் தடங்கள், அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவை பற்றிய விவரங்களையும் இதிலிருந்து பெறமுடியும்.

துல்லியமாக பார்க்க முடியும்

மேலும், வாக்குச்சாவடியிலிருந்து முக்கிய பல சாலைகளுக்கு இடையேயான தூரத்தையும் எளிதில் கணக்கிட முடியும். தேர்தல் சமயத்தில் ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலை உருவானால், புவிசார் அமைப்பின் வரைபடத்தைக் கொண்டு தேர்தல் அலுவலர்கள் முக்கிய முடிவுகளை எளிதில் எடுக்க முடியும். இந்தவிவரங்களை தற்போது அரசுத் துறை அலுவலர்கள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். பொதுமக்கள் இப்போதைக்கு பெறமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலரும் தென்காசி தொகுதி தேர்தல் அலுவலருமான முத்துராமலிங்கம், தேர்தல் வட்டாட்சியர் புகாரி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x