Published : 08 Mar 2019 09:53 AM
Last Updated : 08 Mar 2019 09:53 AM

மைதானமே இல்லாமல் சாதிக்கும் பூமலூர் அரசுப் பள்ளி மாணவர்கள்!

அந்த அரசுப் பள்ளியில் மைதானமே இல்லை. ஆனாலும், விளையாட்டில் சாதிக்கிறார்கள். எங்க இந்த ஆச்சரிய நிகழ்வு? திருப்பூர் மாவட்டம் பூமலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தங்களது தேவைகளையும், பிரச்சினைகளையும் எண்ணி புலம்பாமல், குறைகளையே நிறைகளாக்கி சாதித்து வருகிறார்கள்.  இந்த அரசுப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், ஆசிரியர்களின் ஒட்டுமொத்த உழைப்புக்கு முக்கியக் காரணமாகவும் உள்ளது.

பேருந்து வசதியற்ற இந்த கிராமப்புற அரசுப் பள்ளி, விளையாட்டில் பெரும் சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.  6-ம் வகுப்பு தொடங்கி 10-ம் வகுப்புவரை மொத்தம் 255 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். பள்ளியபாளையம், கணக்கம்பாளையம், பெருமாம்பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் பூமலூரில் வாழும் விசைத்தறித்  தொழிலாளர்கள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின்  குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடம் இது.

முதல் அடி டேபிள் டென்னிஸ்!

பள்ளியில் மைதான வசதி இல்லாத நிலையில்,  டேபிள் டென்னிஸ் விளையாடலாம் என முடிவெடுத்தனர்.  அறிவியல் சோதனைக் கூடத்தில் உள்ள மர டேபிளைக் கொண்டு விளையாடத் தொடங்கினர். டேபிள் டென்னிஸ்  போர்டு வாங்குவதற்கான நிதி கையில் இல்லை.  ஆனாலும், சாதிக்க வேண்டும் என்ற உணர்வுடன், ஆய்வக மர டேபிளில் விளையாடினர். கடும் பயிற்சி காரணமாக, தற்போது திருப்பூர் மாவட்டத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தனி முத்திரை பதித்து,  2016-ம் ஆண்டு முதல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இப்பள்ளி.

டேபிள் டென்னிஸ், டென்னி காய்ட், கோகோ, வாலிபால், தடகளம் என  9 விளையாட்டுகளில் கீழ், குறுமையம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் 15 பிரிவுகளில் முதலிடம் பிடித்ததாக சொல்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.ரமேஷ்.

“டேபிள் டென்னிஸ் போட்டியில் 8 பிரிவுகளில், அனைத்திலும் முதலிடமும், டென்னிகாய்ட் போட்டியில் 8 பிரிவுகளில் 7-ல் முதலிடமும், ஓட்டம், மும்முறை தாண்டுதலில் 2-ம் இடமும், குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதலில் 3-இடமும் பிடித்து சாதித்துள்ளனர் எங்கள் பள்ளி மாணவர்கள்.

கோவை டெக்லத்தான் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருகிறது.  பிரமுகர்கள் ராஜசேகரன், ஹரிநாராயணன், ஞானமனோகரன் உட்பட பலரும்,  விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளிப்பதால் எங்கள் மாணவர்கள் சாதிக்கிறார்கள்” என்றார்.

யோகா போட்டியிலும் சாதனை!

8-ம் வகுப்பு மாணவர் தரீஷ், தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வானார். ஆனால்,  சர்வதேச அளவில் அந்தமானில் நடைபெற்ற போட்டியில், பொருளாதார சூழ்நிலை காரணமாக பங்கேற்க இயலவில்லை. யோகா போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள்  தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றனர். டென்னிகாய்ட் விளையாட்டில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி  மாவட்டங்களை உள்ளடக்கிய, மண்டல அளவிலான  போட்டிகளில் வெற்றி பெற்ற இப் பள்ளி மாணவி லாவண்யா, மாநிலப்  போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

 திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இம்பார்ட் (IMPART-IMPROVEMENT OF PARTICIPATION) சமக்கிரசிக்‌ஷா திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், பூமலூர் அரசு உயர்நிலைப் பள்ளி அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்றது. சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில்,  களப் பணியுடன் கூடிய ப்ராஜெக்டை தேர்வு செய்து, முடித்து ஒப்படைக்க வேண்டும். அதன்படி, ஆங்கிலப் பாடப் பிரிவில் உருவாக்கப்பட்ட ’போதைப் பழக்கம் ஒழித்தலும், பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை குறைத்தலும்’ தொடர்பாக தயாரிக்கப்பட்ட ப்ராஜெக்ட், மாநிலப் போட்டிக்கு தேர்வானது.

கடந்த பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் சென்னையில் நடந்த மாநில அளவிலான சிறப்பு அறிக்கை சமர்பிக்கப்படும் நிகழ்விலும் இப்பள்ளி பங்கேற்றது.  இதில் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள்,  கார்த்திகா, மவுனகுரு, தேவசரண்யா மேரி, லாவண்யா, மதன்கார்த்திக் ஆகியோர்  இந்த ப்ராஜெக்டை செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் விசைத்தறி, கட்டடித் தொழிலாளர்களின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது” என்கின்றனர் மிகுந்த பெருமிதத்தோடு பள்ளி ஆசிரியர்கள்.

சமூகத்தின் கீழ்நிலையில் இருக்கும் ஒருவரை மேலே தூக்கிவிடுவதுதான் கல்வியின் பணி. அதை இந்தப் பள்ளி மனப்பூர்வமாக செய்துவருவதாக சிலாக்கின்றனர் குழந்தைகளின் பெற்றோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x