

தேனி மாவட்டம், பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக செப்.5 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து 5.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி மற்றும் மதுரை வடக்கு வட்டங்களிலுள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.