

பிலிம் நியூஸ் ஆனந்தனின் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் தொகுத்துள்ள 'ஞாபகம் வருதே' நினைவலைகள் நூல் வெளியீட்டு விழா நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது .
தென்னிந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தனின் நினைவு நாள் இன்று. இந்நிலையில் அவரைப் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் தொகுத்துள்ள 'ஞாபகம் வருதே' நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் நடைபெற்றது. நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன், ராம்ஜி,நூலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருந்த திரைப்பட இயக்குநர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் , 'இந்து தமிழ்' உதவி செய்தி ஆசிரியர் மானா பாஸ்கரன், பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் தமக்கும் உள்ள நட்புறவு பற்றியும் நூலைப் பற்றியும் கலந்துரையாடினார்கள்.