Published : 19 Mar 2019 03:17 PM
Last Updated : 19 Mar 2019 03:17 PM

கனடா வாழ் தமிழர்களின் வேண்டுகோள்: வேகமாக முன்னேறும் டொரண்டோ தமிழ் இருக்கை

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைந்துவிட்டது. அதன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகிவிட்டது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழும் மாநகரம் டொரண்டோ. அங்கே ஒரு தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்ற கனடா வாழ் தமிழ் மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் நடந்த விழாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபதலைவர் புரூஸ் கிட் பேசும்போது “ஒரே இரவில், இரண்டே மணி நேரத்தில் 7,00,000 கனடிய டாலர்கள் நிதியாகத் திரண்டது கனடிய வரலாற்றில் மட்டுமல்ல; பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலும் இதுவே முதல் முறை. மொழியைக் காக்கவும் வளர்க்கவும் தரப்படும் நன்கொடையே அனைத்திலும் சிறந்தது. அதைத் தமிழ் மக்கள் செய்திருக்கிறார்கள்” என, பலத்த கைதட்டல்களுக்கு இடையே தெரிவித்தார். அந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் அணிவகுத்து வந்து, வரிசையில் நின்று நன்கொடை வழங்கிய காட்சி மொழியே தங்களின் அடையாளம் என்பதை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதைக் காட்டியது.

தேவை மூன்று மில்லியன்

கனடா நாட்டில் மொத்தம் 96 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் பழமை வாய்ந்த டொரண்டோ பல்கலைக்கழகம்.  கனடா நாட்டின் முதல் தரமான கல்வி நிறுவனமான இது, கனடா நாட்டுக்கு மூன்று ஆளுநர்கள், நான்கு பிரதமர்கள், 14 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நோபல் பரிசு வென்ற பத்து சாதனையாளர்கள், ரூறிங் பரிசு வென்ற மூன்று சாதனையாளர்கள், ரோட் பரிசு வென்ற 94 சாதனையாளர்களைத் தந்திருக்கிறது.

இத்தனை சிறப்புமிக்க டொரண்டோ பல்கலைக்கழகம் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் உலகுக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகங்களின் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அதில் தமிழ் இருக்கையை நிறுவிட மூன்று மில்லியன் கனடிய டாலர்களை இரண்டு ஆண்டுகளுக்கு நன்கொடையாகத் திரட்டி முழுமையாகக் கையளிக்க வேண்டும். ஆனால் நிதி இலக்கு பாதி அளவை மட்டுமே எட்டியிருக்கிறது. டொரண்டோவில் நிறுவப்படும் இத்தமிழ் இருக்கை, இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டிய தமிழ்க் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மையப்புள்ளியாகவும் கலங்கரை விளக்கமாகவும் அமையும். இது உலகத் தரத்தில் தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு, தொடர் பயன்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் வலுசேர்த்து எதிர்காலத் தமிழ்ச் சந்ததிக்கு நன்மை பயக்கும்.

டொரண்டோ தமிழ் இருக்கைக்காக அளிக்கப்படும் அனைத்து நன்கொடை விவரங்களும் அப்பல்கலைக்கழகத்தில் நிரந்தரமாகப் பொறிக்கப்படும். இந்த முன்னெடுப்புக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் www.torontotamilchair.ca என்ற இணையதளத்துக்குச் சென்று DONATE என்ற பொத்தானை அழுத்தி  நன்கொடையை வழங்கலாம். அனைத்து நன்கொடைகளும் அறநல வரி பற்றுச்சீட்டு (charitable tax receipt) வழங்கி ஏற்கப்படும்.

ஒரு பொம்மையின் வீடு

டொரண்டோ பல்கலை.யில் இருக்கை அமைவதற்கான நிதியைத் திரட்ட கனடா வாழ் தமிழ்ச் சமூகம் பல்வேறு அதிகாரபூர்வ நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. மூத்த நாடக கலைஞர் பி.விக்னேஸ்வரன் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட எழுத்தாளர் ஹென்ரிக் இப்ஸனின் ‘ஒரு பொம்மையின் வீடு’ நாடகம் கடந்த  அக்டோபர் 8-ம் தேதி டொரண்டோவில் மேடையேறியது. இதுவே டொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதி திரட்டலுக்கு நடத்தப்பட்ட முதல் நிகழ்வு.

முற்றத்து மல்லிகை

முற்றிலும் கனடியக் கலைஞர்கள் பங்குபெற்ற ‘முற்றத்து மல்லிகை’ நிதி திரட்டலுக்கான இசை நிகழ்வு  கடந்த டிசம்பர் 1-ம் தேதி டொரண்டோவில் வெற்றிகரமாக நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட  நிதி அத்தனையும் டொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு அளிக்கப்பட்டது. அன்றைய நிகழ்வில் பாடல்களை இயற்றியது, இசையமைத்தது, இசைக்கருவிகளை மீட்டியது மாத்திரமல்லாமல் அவற்றைப் பாடியதும் கனடியக் கலைஞர்களே. டொரண்டோ பல்கலைக்கழக செயலாற்று இயக்குநர் ஜோர்ஜெட் சினாட்டியிடம் இசை நிகழ்ச்சி மூலம் சேர்ந்த தொகை மேடையில் காசோலையாக வழங்கப்பட்டது.

அவர் பேசும்போது, “இசைக்குழுவினர் வழங்கிய அற்புதமான இசையால் நான் கவரப்பட்டேன். இவர்களால் திரட்டப்பட்ட நிதி, டொரண்டோ தமிழ் இருக்கைக்கு அளிக்கப்படுவது உணர்வுபூர்வமான பங்களிப்பு. ஒரு மொழியை நேசித்து அதை வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் மக்களால் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் இருக்கை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.  இது வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாக அமையும். தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்கும், தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக  என்றென்றும் நிலைபெறும்” எனக் கூறிப் பாராட்டினார்.

டி. இமானின் கனடா வருகை

டொரண்டோ பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக 2019 ஜனவரி 21 –ம் தேதி மாலை தமிழ் மரபு தினம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் டி. இமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அவர் இசையமைத்திருந்த டொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலை  வெளியிட்டார். கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல் இது. சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாகப் புகழ்பெற்ற திவாகர் பாடியிருந்தார். இமானை வரவேற்றுப் பேசிய டொரண்டோ பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி, “மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் டொரண்டோவில் உருவாக்கப்பட்டும் தமிழ் இருக்கை புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதுடன் தமிழின் மேன்மையை அனைத்துலக மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு வழி வகுக்கும்” என்று கூறி இமானுடைய இசையைப் பாராட்டி விருது வழங்கினார்.

 ஏற்புரையில் இமான் பேசும்போது,  “தமிழர்கள் பலதேசங்களில் மதம், சாதி, கொள்கை எனப் பிரிந்து கிடந்தாலும் தமிழ் என்னும் 'ஒற்றைச் சொல்' அவர்களை இணைக்கிறது. மொழியை இழக்க என்றுமே நாம் விரும்பமாட்டோம்” என்றார். இமானின் உரையைத் தொடர்ந்து நிதி திரட்டல் நடந்தது.

வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

DSC0368JPG100 

தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம் என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் நடப்பு மார்ச் 9-ம் தேதி அன்று ‘மாகா’ வழங்கிய 'மன்னார்குடி போன கதை 2.0' வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அமைந்திருந்தது. இசையோடும் நடிப்போடும் எளிய பேச்சு வழக்கில் மக்களுக்குக் கதை சொல்லும் நலிந்து வரும் தமிழகப் பாரம்பரிய இசைக் கலைக்கு ஆதரவு தரும் வகையில் கனடா நாட்டின் பிரபலமான தமிழ் மருத்துவர் ரகுராமன் இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கானோர் அடங்கிய அரங்கில் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் அதில் பங்குபெற்ற தமிழ் மக்கள் மேடையிலேயே நன்கொடைகளைக் கையளித்தனர். நிதி திரட்டப்பட்டு வரும் முனைப்பையும் வேகத்தைக் கண்ட பார்வையாளர் ஒருவர் குறித்த தேதிக்குள் மூன்று மில்லியன் கனடிய டாலர்கள் இலக்கை எட்டிவிடமுடியும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். இருப்பினும் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள், கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிக்க வரும்படி டொரண்டோ தமிழ் இருக்கைக் குழு அழைப்பும் வேண்டுகோளும் விடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x