Published : 02 Mar 2019 01:09 PM
Last Updated : 02 Mar 2019 01:09 PM

அபிநந்தன் தமிழ் மண்ணின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றி உள்ளார்: வைகோ பெருமிதம்

கேள்விகள் கேட்டபொழுது கொஞ்சம்கூட பயம் இன்றி, துணிச்சலாக அவர் பதில் சொன்னது தமிழகத்தை மிகவும் பெருமைப்படுத்துகிறது என வைகோ அபிநந்தன் விடுதலை குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது வைகோ கூறியதாவது:

''சமாதானத்தை விரும்பும் இந்த உலகமே அபிநந்தனை வாழ்த்துகிறது. தமிழ்நாடு பெருமைப்படுகிறது. சேரன் செங்குட்டுவனும், நெடுஞ்செழியனும், கரிகால் பெருவளத்தானும் என்று சொல்லி வந்தோமே அந்த மண்ணின் வீரத்தை மானத்தை உலகுக்குப் பறைசாற்றி இருக்கிறார் அபிநந்தன்.

விமானத்திலிருந்து பாகிஸ்தானில் அவர் குதித்தபோது, கிராமவாசிகள் அவரை அடித்திருக்கிறார்கள். அதனால்தான் முகத்தில் ரத்தம். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை அங்கிருந்து மீட்டுக்கொண்டு போயிருக்கிறார்கள். கேள்விகள் கேட்டபொழுது கொஞ்சம்கூட பயமின்றி, துணிச்சலாக அவர் பதில் சொன்னது தமிழகத்தை மிகவும் பெருமைப்படுத்துகிறது.

நாட்டைக் காக்க இந்திய உபகண்டத்துக்கே தமிழகம் வீரர்களைப் பலி கொடுத்திருக்கிறது. புல்வாமா தாக்குதலின்போது சுப்பிரமணியனும், சிவசந்திரனும் உயிர் கொடுத்தார்கள். அபிநந்தனை நெஞ்சில் வைத்துப் பூஜிக்கிறோம்.

ஆனால், நாட்டைப் பாதுகாக்க வேண்டிய ரஃபேல் விமானங்களை எந்தவித அனுபவமும் இல்லாத அம்பானி குடும்பத்துக்கு ஒப்பந்தம் கொடுக்க முயன்றது மிகவும் தவறானது மட்டுமல்ல, விமானப் படையின் வலிமையைக் கூட்டுவதாக அமையாது என்ற விதத்தில் நாட்டைக் காப்பது நமது கடமை.

பிரிவினை காலத்திலேயே அண்ணா, திமுக இளைஞர்களே நாட்டைக் காக்க ராணுவத்தின் சைனியத்தில் சேருங்கள். உயிர் துறக்கத் தயாராகுங்கள் என்று சொன்னார். அதே உணர்வுதான் மதிமுகவுக்கும். கார்கில் போரில் நாட்டுக்காக உயிர் கொடுத்த அத்தனை வீரர்களின் வீட்டுக்கும் சென்றேன். நாட்டைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் நாம் தயாராக இருப்போம்''.

இவ்வாறு வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x