சர்ச்சை எதிரொலி: நூலகத்திலிருந்து படத்தை அகற்ற உத்தரவிட்டார் உதயநிதி

சர்ச்சை எதிரொலி: நூலகத்திலிருந்து படத்தை அகற்ற உத்தரவிட்டார் உதயநிதி
Updated on
1 min read

ட்விட்டரில் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுக ஆரம்பித்த நூலகத்திலிருந்து தன் படத்தை அகற்ற உத்தரவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால், திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதற்காக ஆயுத்தமாகி வருவது மட்டுமன்றி, இடையே திமுக கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்

இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அப்போது கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருடன் உதயநிதி புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

இதனைப் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் "எந்தப் பொறுப்பில் இருக்கார்னு அவர் புகைப்படத்தை கட்சி அலுவலகத்தில் வெச்சிருக்கீங்க. உங்க விஸ்வாசத்துக்கு அளவில்லாம போயிடுச்சு'' என்று உதயநிதி ஸ்டாலினைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

இது சர்ச்சையானது. இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் "என்னுடைய படம் நேற்றே அங்கிருந்து அகற்றப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட போது, "முதலில் அது கட்சி அலுவலகம் அல்ல. மறைந்த கருணாநிதியின் பெயரில் நூலகம் ஒன்றைத் திறந்து வைத்தேன். அப்போது அண்ணா, தலைவர் கருணாநிதி, அப்பா அவர்களது புகைப்படத்துடன் என் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

அங்கு சென்றவுடனே என் புகைப்படத்தைப் பார்த்தவுடனே எடுக்கச் சொல்லிவிட்டேன். அண்ணா,தலைவர் கருணாநிதி, அப்பா ஸ்டாலின் அவர்களோடு என் புகைப்படத்தை வைக்கக்கூடாது என்று சத்தம் போட்டேன். அதற்குள் அங்கு எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து ஒருவர் கேள்வி எழுப்பினார். உண்மையில், அப்படம் அப்போதே அகற்றப்பட்டு விட்டது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, மூன்றாம் கலைஞர் எனக் குறிப்பிட்டு பேனர் அடித்ததிற்கும் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in