நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக்பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை: உயர் நீதிமன்றம் உத்தரவு 

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக்பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை: உயர் நீதிமன்றம் உத்தரவு 
Updated on
1 min read

நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் அட்டாக்பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் நாளிதழ் அலுவலகம் ஒன்றில் 9.5.2007 அன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக்பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 9.12.2009-ல் விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், வினோத்தின் தாயார் பூங்கொடி தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு இன்று (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவு:

மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான அட்டாக்பாண்டி, பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

இவர்கள் மீதான பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வெடி மருந்து சட்டம் உட்பட 5 பிரிவுகளுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த தண்டனையை 9 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

இந்த 9 பேரில் அட்டாக்பாண்டி (பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்) தவிர்த்து எஞ்சிய 8 பேரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகியோரின் குடும்பத்துக்கும் தமிழக அரசு 3 மாதத்தில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கில் 17-வது எதிரியான டிஎஸ்பி ராஜராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவருக்கான தண்டனை மார்ச் 25-ல் அறிவிக்கப்படும். அதற்காக அன்று ராஜராம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை பொறுத்தவரை சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. சிபிஐ மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், சம்பவத்தில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in