Published : 04 Mar 2019 05:12 PM
Last Updated : 04 Mar 2019 05:12 PM

ரூபாய் 2,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், என மொத்தம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெற்று பயனடைவர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 11 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவி  வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 32 தொழிலாளர் குடும்பங்களுக்கு 2,000 ரூபாயை அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேரும் வகையில் அதற்கான நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x