Published : 25 Mar 2019 08:59 AM
Last Updated : 25 Mar 2019 08:59 AM

விலங்கு விரட்ட பிறந்த பறை!

தமிழரின் பாரம்பரிய இசையான பறை இசை தொடர்பாக தற்போது மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு பறை இசைக் குழுக்கள் தமிழகமெங்கும் பறை இசையை ஒலிக்கச் செய்கின்றன. அதேசமயம், ஆசிரியர், திரைப்படக் கலைஞர், வியாபாரி என வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் இணைந்து, பறை இசையை ஒலித்துக் கொண்டிருந்தது நம்மைக் கவர்ந்தது. இவர்கள் யாரும் தொழில்முறைக் கலைஞர்கள் இல்லை. அதேசமயம்,  பறை இசை மீதான ஆர்வத்தால், தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பறை இசையைப் பயிற்றுவித்து வருகின்றனர் என்பதும் ஆச்சரியமூட்டும் தகவல்தான்.

தமிழகத்தின் பாரம்பரிய  இசை, நடனம் போன்றவை படிப்படியாக அழிந்து வருகின்றன.  எதிர்கால சந்ததிக்கு இதுபோன்ற கலைகள் இருந்ததே தெரியாமல்போகும்  சூழலும் நிலவுகிறது. அதேசமயம், இவற்றைக் காப்பாற்ற பல அமைப்புகள் முயற்சிக்கின்றன. சில அமைப்புகள் பறை இசை போன்ற பாரம்பரியக் கலைகள் தொடர்பாக  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

சென்னையில் செயல்படும் அறம் கலைக் குழு, மக்கள் சட்டம் மையம், மலைச் சொல் கலை  இலக்கிய சமூக மையம் ஆகியவை, பறை இசை தொடர்பாக நீலகிரி மாவட்ட மாணவர்களிடம் பறை இசை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக,  ‘ஆதிக்கலை விழா’ என்ற நிகழ்ச்சியை  உதகை அரசு கலை கல்லூரியில் நடத்தின.

இதில், அறம் கலைக் குழுவைச் சேர்ந்த கலைஞர்கள், பறை இசைத்தபடியே சிலம்பமாடி அசத்தினர். பறை இசைக்கு ஏற்றவாறு சிலம்பாட்டம், கயிறு சுற்றுதல் போன்ற சாகசங்களை நிகழ்த்தி, மாணவர்களை கவர்ந்தனர். தொடர்ந்து, மாணவர்களையும் நடனமாட வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, பேராசிரியர்கள் போ.மணிவண்ணன், ராமகிருஷ்ணன், ரவி உள்ளிட்டோ் பங்கேற்றனர். பேராசிரியர்களின் அனுமதி கிடைத்தவுடன்,  மாணவ, மாணவிகள் அறம் கலைக் குழுவினரின் பறை இசைக்கு ஏற்ப, துள்ளலாய் நடனமாடியதைப் பார்த்த பார்வையாளர்கள், விண்ணைப் பிளக்கும் கரகோஷம் எழுப்பி பாராட்டினர்.

“என்னதான் மேற்கத்திய இசைக்கு இளைய தலைமுறை அடிமையாகி இருந்தாலும், நம் மண்ணின் பாரம்பரிய பறையை இசைக்கும்போது ஏற்படும் உணர்வு, நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது” என்கின்றனர்  மாணவர்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த மக்கள் சட்ட மைய இயக்குநர் வழக்கறிஞர் விஜயன் கூறும்போது,

“தமிழகத்தின் ஆதி கலைகளில் ஒன்றான பறை இசையை, மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அறம் கலைக் குழு மூலம் பறை இசை நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களிலும் நடத்தப்படுகின்றன. இந்தக் குழுவில் உள்ள யாரும் தொழில்முறை கலைஞர்கள் கிடையாது.  இவர்கள் வெவ்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள். குழுத் தலைவர் சிமித்,  திரையுலகைச் சேர்ந்தவர்.  ஜெனிஃபர்,  எம்.ஏ. பி.எட்.

படித்த தமிழாசிரியர். ஒருவர் ரத்த வங்கி சேவையில் ஈடுபட்டுள்ளார். மற்றொருவர்  வியாபாரி. சிலர் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் குழுவாக இணைந்து, மாநிலம் முழுவதும் பயணித்து, பறை இசையைப் பரப்பி வருகின்றனர். தமிழின் பாரம்பரியம், தமிழர் கலாச்சாரம் ஆகியவையே இவர்களை இணைத்துள்ளன. மேலும், மாநிலம் முழுவதும், மாணவர்களுக்கு இலவசமாக  பறை இசை பயிற்சியும் அளிக்கின்றனர்.

தற்போது, பறை இசைக்குப் பயன்படுத்தப்படும் கருவி, ஃபைபரால் செய்யப்படுகிறது. ஆனாலும்,  இந்த கலைக் குழுவினர் பாரம்பரியமாக பறை இசைக்கு தோலால் செய்யப்பட்ட கருவிகளையே பயன்படுத்துகின்றனர்.  இதன் மூலம், பறை இசையின் பாரம்பரியத்தையும் அவர்கள் பாதுகாக்கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x