Published : 31 Mar 2019 07:46 PM
Last Updated : 31 Mar 2019 07:46 PM

திமுகவில் மாவட்ட நிர்வாகிகள் ஏதோ சம்பளத்துக்கு வேலை பார்ப்பது போல் இருக்கின்றனர்: மவுனம் கலைத்த மு.க.அழகிரி

திமுகவில் உண்மையாக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை என அதிரடியாக அழகிரி கருத்து கூறியுள்ளார்.
 

திமுகவில் தென் மண்டல அமைப்புச்செயலாளராக இருந்த அழகிரி தென் மண்டலத்தில் திமுகவின் பெரிய தலைவராக இருந்தார். அவரது தலைமையின்கீழ் திமுகவினர் தென் மாவட்டம் முழுதும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்டாலினுடன் ஏற்பட்ட தொடர்ச்சியான மோதலில் ஸ்டாலினா அழகிரியா என கட்சிக்குள் பெரிய அளவில் வாதம் இருந்து வந்தது.

ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின்தான் தனக்குப்பின் என கருணாநிதி சூசகமாக தெரிவித்தார். இந்நிலையில் திமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்துவந்த அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்தனர். இதையடுத்து அவர் நிரந்தரமாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.

பின்னர் கருணாநிதி உடல் நலம் குன்றியபோது மீண்டும் கோபாலபுரம் இல்லம் வந்த அழகிரி அவ்வப்போது கோபாலபுரம் வந்து தந்தையைப்பார்த்துச் சென்றார். கருணாநிதி மறைவின்போது அவரும் ஸ்டாலினும் ஒன்றாக இருந்தனர். மீண்டும் திமுகவில் இணைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அதுகுறித்த பேச்சையே ஸ்டாலின் எடுக்கவில்லை.

ஸ்டாலின் தலைவராக வருவதை ஆட்சேபித்து அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலின் ஒருமனதாக தலைவரானார். திமுக முழுமையாக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அழகிரி ஒதுங்கி இருந்தார். தேர்தல் அறிவிப்புகள் தொடங்கிய நேரத்தில் அழகிரி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் வதந்திகள் கிளம்பியது.

ஆனால் அது மறுக்கப்பட்டது. சமீபத்தில் அழகிரி திமுகவுக்காக வாய்ஸ் கொடுக்க உள்ளதாக ஒரு பேச்சு எழுந்ததால் திமுகவினர் சந்தோஷ மனநிலையில் இருந்தனர். இந்நிலயில் அதற்கு நேர்மாறாக அழகிரி திமுக குறித்து கடுமையான விமர்சனத்தை எடுத்து வைத்துள்ளார்.

இன்று மதுரையில் தனது ஆதரவாளர் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் எம்.எல்.ராஜ் மகள் திருமணத்தை நடத்தி வைக்க  குடும்பத்துடன் மு.க.அழகிரி வந்தார். திருமணத்தை நடத்தி முடித்தவுடன் அழகிரி பேசினார். அப்போது எம்.எல்.ராஜின் விசுவாசத்தையும் அவர் திமுகவுக்காக எப்படி எல்லாம் உழைத்தார் என்று கூறிய அவர் அவரது விசுவாசத்துக்கு ஏற்ற இடத்தில் அவர் பொறுப்புகளை வகித்தார் ஆனால் இன்று அப்படியா உள்ளது என்று பேசினார்.

தி.மு.க இப்போதெல்லாம் அப்படியல்ல. ஏதோ சம்பளத்துக்கு வேலை பாக்கிற மாதிரி மாவட்டச்செயலாளர்கள் இருக்கிறார்கள். திமுகவில் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள் அவர்களது பாஸ் அடுத்த மாவட்டத்தில் இருக்கிறார். மாவட்ட்ச்செயலாளர்கள் பினாமி மாவட்டச்செயலாளர்களாக இருக்கிறார்கள். உண்மையாக உழைக்கிறவர்கள் தி.மு.கவில் இல்லை.

இவ்வாறு அழகிரி பேசினார். திமுகவை கடுமையாக விமர்சித்ததன்மூலம் திமுகவுக்காக அழகிரி வாய்ஸ் கொடுக்க உள்ளார் என்கிற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அழகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x