சேலத்தில் காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சேலத்தில் காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
Updated on
1 min read

சேலத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை, அம்மாபேட்டை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவியை, பாரதி நகரைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார்(22) தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பள்ளி விட்டுச் செல்லும் போதும், வீட்டில் இருந்து வரும் போதும் மாணவியைப் பின் தொடர்ந்து அஜித் குமார் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததால், பள்ளிக்கு  அனுப்பாமல் நிறுத்தினர்.

ஆனால், அஜித் குமார், மாணவியின் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். மாணவி 'மைனர்' பெண் என்பதால் பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த அஜித் குமார், மாணவி தன்னைக் காதலிக்காவிட்டால் அவர் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஜித் குமார் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்தனர். அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி ‘ஆசிட்’ வீசுவதாக மிரட்டல் விடுத்த அஜித் குமார் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். அஜித் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in