Published : 30 Mar 2019 12:18 PM
Last Updated : 30 Mar 2019 12:18 PM

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர்: பிரேமலதாவின் பிரச்சார உளறல்

கோவையில் பாஜக வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, "புல்வாமா தாக்குதலை நடத்தி ஒரு தைரியமிக்க பிரதமராக இந்த உலகுக்கு நிலைநாட்டியவர் பிரதமர் மோடி" என உளறியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் பிரேமலதா. அப்போது அவர் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என சொல்வதற்குப் பதிலாக முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கோரினார். இதனால் கூட்டத்திலிருந்தவர்கள் சிரித்தனர். இதேபோல், பொள்ளாச்சியில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்தபோதும் இரட்டை இலை சின்னத்துக்கு பதிலாக முரசு சின்னத்துக்கே வாக்கு கோரினார். செல்லுமிடமெல்லாம் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு தனது கட்சி சின்னத்தில் வாக்களிக்க கோரிவரும் பிரேமலதாவால் கூட்டத்தில் சிரிப்பலைகள் எழுந்து நீங்குகின்றன.

தீவிரவாத தாக்குதலுடன் குழப்பம்..

சின்னத்தை மாற்றியதையாவது விட்டுத்தள்ளிய சமூக வலைதளங்கள் அவர் பொள்ளாசியில் "புல்வாமா தாக்குதலை நடத்தி ஒரு தைரியமிக்க பிரதமராக இந்த உலகுக்கு நிலைநாட்டியவர் பிரதமர் மோடி" எனப் பேசியதை வைரலாக்கி கிண்டல் செய்து வருகின்றனர்.

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாகோட்டில் தாக்குதல் நடத்தியது. இதை சொல்வதற்குப் பதிலாகவே பிரேமலதா புல்வாமா தாக்குதலை பிரதமர் நடத்தியாக சொல்லியுள்ளார்.

அத்துடன் நிற்கவில்லை பிரேமலதா, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பாஜக சாதனையாக சொல்லிக் கொள்ளும் ஜிஎஸ்டியை குறைத்துப் பேசினார். ஆனால், உடனே சுதாரித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் ஜிஎஸ்டியை சீர்திருத்தி மக்களுக்கு பிரதமர் ஆறுதல் அளிப்பார் என்று கூறி முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x