Published : 14 Mar 2019 11:08 AM
Last Updated : 14 Mar 2019 11:08 AM

அமமுக வேடிக்கைப் பார்க்காது; பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடும்: தினகரன்

மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக அமமுக போராடும் என, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக் கோரி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட அடக்குமுறையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது, தமிழகத்தையே அதிர வைத்திருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சந்தேகத்தை அதிகப்படுத்தி வருகின்றன.

கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆன பிறகும் குற்றம்சாட்டப்பட்டவர்களை இதுவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக சொன்னபிறகு சிபிசிஐடி அதிகாரிகள் திடீரென போய் விசாரிக்கிறார்கள். 'அரசியல் வாரிசுகளுக்கு 100% தொடர்பில்லை' என்று கோவை எஸ்பி பேட்டி கொடுத்தபின்னர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 'பார்' நாகராஜ் இருக்கும் புதிய வீடியோக்கள் வெளியாகி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

மர்மங்கள் நிறைந்த பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிப்பதை விட்டுவிட்டு, தமிழக அரசு காவல்துறையை ஏவி மாணவர்களைத் தாக்குவது, கல்லூரிகளை மூடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது, மாணவர்களிடம் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடும்" என, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x