Published : 07 Mar 2019 02:30 PM
Last Updated : 07 Mar 2019 02:30 PM

துரைமுருகன் திமுக தலைமை பற்றி என்னிடம் குறை கூறியதை வெளியே சொல்லட்டுமா?- சுதீஷ் ஆவேசம்

அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசும்போதே திமுக பக்கமும் தேமுதிக பேசியதாகத் தகவல் வெளியானது. அதை துரைமுருகனும் உறுதி செய்தார். தங்களிடம் கூட்டணி குறித்துப் பேச வந்ததாகவும், இடம் இல்லை என அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் தேமுதிகவினர் ஆத்திரமடைந்தனர். இது சுதீஷ் பேட்டியிலும் வெளிப்பட்டது. சென்னையில் இது குறித்து சுதீஷ் விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்களிடம்  சுதீஷ் பேசியதாவது:

“நேற்று அனகை முருகேசன், இளங்கோ உள்ளிட்டோர் நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை அவர்கள் சொந்த வேலையாகச் சந்தித்தனர். இதை ஊடகங்கள் கூட்டணி குறித்துப் பேச சந்தித்துள்ளதாக எழுதியுள்ளனர்.

நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். பாஜக தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் கூட்டணி என்று கூறிய அடிப்படையில் சற்று தாமதமாகத்தான் பேசினோம்.

இதற்கிடையே பாமகவுடன் கூட்டணி உடன்பாடு கண்டு கையெழுத்து போட்டது எங்களுக்கு வருத்தம். கடந்த காலம்போல் ஒன்றாகப் பேசித்தானே கையெழுத்திடுவோம் தற்போது இப்படி நடப்பது சரியா என்கிற அதிருப்தியைத் தெரிவித்தோம்.

நாங்கள் பர்சனலாகத்தான் பேசினோம். நான் நேற்று துரைமுருகனுடன் பேசவில்லை. அது பத்து நாளைக்குமுன் பேசியது. ஆனால் நேற்று பேசியது போல் அவர் கூறியுள்ளார்.

ஆனால், எங்கள் அதிருப்தி அறிந்து திமுக தரப்பினர் பேசினார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் பேசினோம். அது பத்து நாளைக்கு முன் நடந்தது. ஆனால் நேற்று பேசியது போன்று கூறுகிறார்கள்.

துரைமுருகனிடம் நான் கட்சி தாண்டி பல விஷயங்கள் பேசியிருக்கிறேன். அவர் என் ஊர்க்காரர். அவரைப் போன்று பேசியதை நாங்கள் வெளியே சொல்ல மாட்டோம். துரைமுருகன் என்னிடம் என்னென்ன பேசினார் என்பதை நான் சொல்ல முடியுமா?

அவர் கட்சியைப் பற்றியும், தலைமையைப் பற்றியும் பேசியது பற்றி கூறட்டுமா? நான் நாகரீகம் கருதி தனிப்பட்ட முறையில் பேசியதைக் கூறமாட்டேன். என் வளர்ப்பு அப்படி. அவர்கள் வளர்ப்பு அப்படி.

உங்கள் தரப்பு பேசியதாகவும், தலைவரைத் தொடர்புகொண்டபோது அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பேசாமல் விட்டுவிட்டதாகவும் துரைமுருகன் தெரிவித்தாரே?

அவர்களுக்கு நாட்டைப் பற்றி கவலை இல்லை. அதனால்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தூங்கினால் என்ன தூங்காவிட்டால் என்ன? அதுகுறித்து எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள்.

இவ்வாறு சுதீஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x