Published : 20 Mar 2019 08:40 PM
Last Updated : 20 Mar 2019 08:40 PM

மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் சிறையில் அடைத்து விசாரணையை தொடரலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையில் மாறன் சகோதரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் வாரண்ட் பிறப்பித்து அவர்களை சிறையில் அடைத்து வழக்கு விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பிஎஸ்என்எல்லின் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் (கடந்த 2004 முதல் 2007) பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது சகோதரரின் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியதாகப் புகார் எழுந்தது.

இதில் அரசுக்கு 1 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2013-ம் ஆண்டு கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேர் மீது சிபிஐ  வழக்குப் பதிவு செய்தது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கில், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவு முறையாக இல்லை என்பதால் மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலாநிதி மாறன் தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குற்றச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளை தனித்தனியாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி பதிவு செய்தார்.

இந்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மீண்டும் மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றச்சாட்டு பதிவுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக விசாரணை நீதிமன்றம் பின்பற்றவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடைபெற்று வந்தது.

ஏற்கெனவே இந்த வழக்கில் நடந்த வாதத்தில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், கண்ணன், ரவி, கௌதமன் உள்ளிட்ட 5 பேர் தரப்பில், குற்றப்பத்திரிகையில் ஒரு இடத்தில் கூட கலாநிதி மாறன் பெயர் சேர்க்கப்படவில்லை எனவும், சாட்சிகளில் யாரும் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை எனவும், உள் நோக்கத்தோடு வேண்டுமென்றே கலாநிதி மாறன் பெயரை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

தயாநிதி மாறனின் கோபாலபுரம் இல்லம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள இல்லம் ஆகியவற்றுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் எங்கிருந்து தங்கள் தொலைக்காட்சி வந்தது, இதில் முகாந்திரம் இல்லை. கூட்டுச் சதியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் அவர்கள் அளிக்கவில்லை, குற்ற விசாரணை நடைமுறைச் சட்ட விதிகளுக்கு எதிராக இந்த வழக்கை சிபிஐ நடத்தி வருவதாகவும் வாதிடப்பட்டது.

சிபிஐ தரப்பில், குற்றச்சாட்டு பதிவை எதிர்த்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளதைக் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை இவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தும் இவர்கள் தொடர்ந்து ஆதாரங்கள் இல்லை என்ற பதிலை திரும்பத் திரும்ப தெரிவிப்பதாக ஏற்கெனவே தெரிவித்து, தற்போது தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு கடந்த 13-ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று வழக்கில் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கோரி மீண்டும், மீண்டும் மனுதரார் வழக்கு தொடர்ந்தார்.

ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதியதால் தான் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுகளில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை.

குற்றச்சாட்டுகளில் இருந்தும் வழக்கில் இருந்தும் விடுவிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் மனுதரார்களின் மனுவை ஏற்கெனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரர்கள் வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் சந்தித்து சட்டப்படி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே தற்போதைய நிலையில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யச் கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் தனது உத்தரவில் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணையைத் தொடரலாம் என உத்தரவில் தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x