Published : 18 Mar 2019 07:42 PM
Last Updated : 18 Mar 2019 07:42 PM

நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிக்கு 5 தொகுதிகளா?- அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள்: ராஜகண்ணப்பன் ஆவேசம்

 

ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என தர்மயுத்தம் செய்த ஒபிஎஸ், மகனுக்காக சீட்டு கேட்டு நிற்கிறார், அதிமுகவில் ஆளுமைமிக்க தலைவர்களே இல்லை, நோட்டாவுடன் போட்டிபோடும் கட்சிக்கு 5 தொகுதிகளா? என ராஜ கண்ணப்பன் ஆவேசமாக கேட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புத்தராததால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவளித்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டினுடைய திராவிட இயக்கத்தின் ஒரே தலைவராக இருக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றாக இணைந்து இந்தியாவின் நலனுக்காக, தமிழ்நாட்டின் தன்மான உணர்ச்சிக்காக போராடுகின்றனர்.

ஆகவே ஸ்டாலின் தலைமையில் பணியாற்றுவது என முடிவெடுத்து, திமுக கூட்டணியில் இணைந்து அதன் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவெடுத்துள்ளோம்.

 தமிழகம் முழுதும் உள்ள 42 லட்சம் தொண்டர்களை கொண்டுள்ள எங்களது இயக்கம், அதோடு அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்கள் முடிவெடுத்து திமுகவை ஆதரிக்க உள்ளோம்.

இந்த தேர்தலில் பாஜகவின் கொத்தடிமையாக செயல்படுகிறது, அதிமுக தலைமை என்று சொல்லிக்கொண்டிருக்கிற ஓபிஎஸ், இபிஎஸ். அவர்கள் இருவருக்குமே ஆளுமை என்பதே கிடையாது. அவர்கள் தலைமையின்கீழ் செயல்பட முடியாத காரணத்தால் விலகுகிறோம்.”

சீட்டு கிடைக்காததால்தான் வெளியேறினீர்களா?

சீட்டு கிடைக்கவில்லை என்பது உண்மைதான், சீட்டு எல்லோரும், எல்லா கட்சியிலும் கேட்பார்கள். திமுகவும் கூட தென் மாவட்டத்தில் கூட்டணி அமைத்துள்ளது கூட்டணிக்காக 6 தொகுதிகளை கொடுத்துள்ளார்கள். ஆனால் அதிமுகவில் 9 தொகுதிகள் கொடுத்துள்ளார்கள். பாஜகவுக்கு ராமநாதபுரமும், சிவகங்கையும் கொடுக்கிறார்கள்.

அதிமுகவில் விவாதம் கிடையாது, இரண்டேபேர். தங்கமணி, வேலுமணி. மணி, மணி. அதற்கு ஒரு முதலமைச்சர். சிவாஜி சிலை திறப்பு விழாவில் சிலையை திறக்க ஒரு சிறந்த நடிகர் என்றார் ரஜினி, அதுபோன்று அவர் ஒரு நடிகர். தென் மாவட்டம் திராவிட இயக்கத்தின் பூமி. அங்குபோய் கூட்டணிக்கட்சிகளுக்கு 5 தொகுதிகள் கொடுக்கிறார்கள்.

அதிமுகவில் உட்கட்சிப்பூசல் இருக்கிறதா?

அந்தக்கட்சியில் உட்கட்சிப்பூசல் நிறைய இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கும் நிறைய இருக்கு. கட்சியில் காரியம் சாதிப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர். உண்மையான தொண்டர்கள் இல்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி ஒன்றாகவேண்டும் என்றுதான் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். ஒரு குடும்பத்துக்குள் கட்சி போகக்கூடாது என்றுதான் ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். இன்று மகனுக்கு சீட்டு வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு கட்சியை அடகு வைப்பது என்ன நியாயம்.

நம்பி வந்தவர்களுக்கு ஒபிஎஸ் துரோகம் செய்துவிட்டாரா?

கண்டிப்பாக துரோகம் செய்துவிட்டார். அவருடைய மகனுக்கு சீட்டு வாங்குவதற்காக கட்சியையே அடகு வைத்துவிட்டார்.

தினகரனுடன் செல்லும் எண்ணமில்லையா?

தினகரன் தனிக்கட்சி நடத்துகிறார். திராவிட இயக்கம் என்றால் ஒன்று திமுக அல்லது அதிமுக. ஆகவே திமுக பக்கம் வருகிறோம். அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர்களே இப்போது இல்லை. சீட்டு கேட்டு கட்சிக்காரர்கள், இபிஎஸ், ஒபிஎஸ் முன்னிலையில் நாற்காலியை எடுத்து அடிக்கிறார்கள். இந்தக்கட்சியில் எப்படி இருக்க முடியும்.

நேர்க்காணலில் நீங்கள் கலந்துக்கொண்டீர்களா?

நேர்க்காணலில் நான் கலந்துக்கொண்டேன், வந்துவிட்டேன் அவ்வளவுதான்.

எந்த பெயரில் நீங்கள் திமுகவை ஆதரிக்கப்போகிறீர்கள்?

நாங்க இப்ப திமுகவின் கூட்டணிக்கட்சி அவ்வளவுதான், நாங்கள் இப்போது இணைய முடியாது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எங்கள் கட்சித்தொண்டர்களை கேட்டுத்தான் இணைவோம். தமிழகம் முழுதும் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன். சிறுபான்மை மக்களுக்கு அதிமுகவில் இடம் கொடுத்தார்களா?

அதிமுகவை விமர்சனம் செய்த பாமக, தேமுதிகவுக்கு கூட்டணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதே?

திமுகவிலும் சீட்டு கேட்டார்கள் பாமகவும், தேமுதிகவும். பாமகவுக்கு ஏன் 8 சீட்டு கொடுத்தார்கள் தெரியாது. தேமுதிகவுக்கு 4 சீட்டு கொடுத்துள்ளார்கள். அரசியல் என்பது நாட்டின் நலனுக்காக எடுக்கும் முடிவு, பாஜகவை ஆதரிக்க முடியாது.

அது பாசிஸ்ட் இயக்காமாக மாறியுள்ளது. பாஜகவுக்கு ஆளே இல்லை அவர்களுக்கு 5 தொகுதிகள் கொடுத்துள்ளார்கள். கொங்கு மண்டலத்தை பாதுகாத்துக்கொண்டு தென்மாவட்டத்தில் தொகுதிகளை வாரிக்கொடுத்துள்ளார்கள்.

பாஜக கூட்டணியில் வந்தது பிப்ரவரி மாதமே முடிவு செய்ததுதானே?

ஆமாம் ஆனால் ஐந்து தொகுதி என்று நேற்றுத்தானே முடிவு செய்துள்ளார். வரிசையாக தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரின்னு கொடுப்பீர்களா? அவ்வளவுபெரிய கட்சியா அது அவ்வளவு ஓட்டு வங்கியா அந்தக்கட்சிக்கு இருக்கிறது? நோட்டாவைக்கூட தாண்டாத கட்சி அது. 4 தொகுதியை கொடுத்தால் மானமுள்ள எங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ப.சிதம்பரத்தை சிவகங்கையில் ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களா?

இதில் என்ன இருக்கிறது. கூட்டணி என்று வரும்போது கட்சி மாறுபாடு கிடையாது. எனக்கும் அவருக்கும் தேர்தலில்தான் போட்டி, அவர் என்ன எனக்கு தனிப்பட்ட முறையிலா விரோதி? அவரை எதிர்த்து ஜெயலலிதா நிற்கச்சொன்னார் நின்றேன். அது அரசியல். இப்ப இந்த கூட்டணியில் இருப்பதால் ஆதரிப்பேன் அதில் என்ன இருக்கிறது.

இடைத்தேர்தல் முடிவுக்குப்பிறகு அதிமுக ஆட்சி இருக்குமா?

18 தொகுதியிலும் திமுக வெற்றிப்பெற்றால் நாளை ஆட்சி இருக்காது, ஆனால் அதை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும், எங்களைப்பொருத்தவரை நாங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டோம். ஆகவே முடிவெடுத்து திமுக தலைவரை சந்தித்து மக்கள் தமிழ் தேச தொண்டர்கள், யாதவ சமுதாயத்தினர், அதிமுக தொண்டர்கள் ஆதரிக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x