Published : 26 Jan 2014 04:09 PM
Last Updated : 26 Jan 2014 04:09 PM

சுப்பிரமணியன் சுவாமியை புறக்கணிக்கிறேன்: வைகோ

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமியை தாம் புறக்கணிப்பதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆவேசமாக கூறினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று சென்னையில் பாஜக அலுவலகத்துக்கு சென்று பேச்சு தொகுதிப் பங்கீடு குறித்து நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, "சென்னையில் வருங்கால பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் வெற்றி பெற மதிமுக சார்பில் அனைத்து உதவிகளும், ஒருங்கிணைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட ஒரு கட்சியால் கமலாலயம் தாக்கப்பட்டபோது, மதிமுக, தொண்டர்கள் கமலாலயம் வந்து, பாஜக நிர்வாகிகளுடன் பேசினர்.

எனது பல ஆண்டு கால அரசியல் அனுபவப்படி சொல்கிறேன். நாடு முழுவதும் வீசும் மோடி அலையால், வரும் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெறும். பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றாலும், அந்த அரசில் கூட்டணிக் கட்சிகள் இடம்பெறும் என்று, பாஜக மேலிடத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பலரது கணக்குகளையெல்லாம் முறியடித்து, பெரும் வெற்றி பெறும்" என்றார்.

பாஜகவில் இணைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, தமிழ்நாட்டில் முரண்பாடான கொள்கை கொண்ட கூட்டணி ஏற்பட்டுள்ளதால், அதிமுக 39 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என ட்விட்டரில் கூறியுள்ளது குறித்து, வைகோவிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு கோபமடைந்த வைகோ, "யார் அவர்? பாஜகவில் இருக்கிறாரா? அவரை நான் புறக்கணிக்கிறேன்" என்றார் ஆவேசமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x