

சென்னையில் கால்டாக்சி ஓட்டுநர் ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் சிக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மதுரையில் சரணடைந்தார். வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் அருகே கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர் ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சிக்கினார். அச்சு அசலாக அசல் கரன்சி நோட்டைப்போலவே அந்த நோட்டு இருந்ததைப் பார்த்து போலீஸாரே திகைத்து போயினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் மோகன்ராஜ் (36) என்பதும் சென்னை வடபழனி காவல் எல்லைக்கு உட்பட்ட நெற்குன்றம் சாலை, அழகிரி நகரில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
சொந்தமாக நிதி உதவிப்பெற்று கார் வாங்கி கால்டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வரும் வருமானத்தில் காருக்கான மாத தவணையை கட்ட முடியவில்லை. இதனால் காரை பறிமுதல் செய்யும் நிலை வருமோ என அஞ்சியுள்ளார். இது குறித்து அதே பகுதியில் தனக்குப்பழக்கமான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு சுரேஷ் எளிதாக பணம் சம்பாதிக்க வழி உள்ளது என தெரிவித்து உன் பணம் ரூ.1 லட்சம் கொடுத்தால் அதை பத்துமடங்காக்கி தரும் லாட்டரி பிஸ்னெஸ் ஒன்று உள்ளது என மோகன்ராஜிடம் தெரிவித்துள்ளார்.
அதை நம்பி மோகன்ராஜும் ஒருமுறை பணம் கொடுத்து அதற்கு கிடைத்த பல மடங்குத்தொகையை வைத்து செலவழித்துள்ளார். இதற்கிடையே மேலும் பணம் சம்பாதிக்க மோகன்ராஜுக்கு ஆசை எழுந்துள்ளது. தன்னிடம் உள்ள பணம் கள்ள நோட்டு என்பதை அறியாத மோகன்ராஜ் அதைப்பற்றி சிலரிடம் பேசி பணம் கொடுத்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் லாட்டரி உள்ளது என பேசியுள்ளார்.
மோகன்ராஜ் பேச்சில் சந்தேகமடைந்த ஒரு நபர் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க போலீஸார் அந்த நபர் மூலமாகவே வலைவிரித்துள்ளனர். பணம் கொடுக்கிறேன் பல மடங்கு ஆக்கித்தரவேண்டும் என அந்த நபர் சொல்ல அதை நம்பிய கால்டாக்சி ஓட்டுநர் அவரை திருவான்மியூரில் ஒரு குறிப்பிட்ட டீக்கடைக்கு வரசொல்லி இருக்கிறார்.
போலீஸார் டீக்கடை அருகே மறைந்திருக்க அந்த நபர் மோகன்ராஜை சந்திக்க பணம் கைமாறும் நேரத்தில் மோகன்ராஜை போலீஸார் பிடித்தனர். அப்போது மோகன்ராஜிடம் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை போலீஸார் சோதித்தபோது அது கள்ள நோட்டு என தெரியவந்தது.
மொத்தம் 130 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவை அச்சு அசலாக ஒரிஜினல் நோட்டுகள் மாதிரியே இருந்தது. பிடிபட்டப்பின்தான் தான் கள்ள நோட்டு கும்பலில் சிக்கி இருப்பதை மோகன்ராஜ் தெரிந்துக்கொண்டுள்ளார். அதுவரை அவர் ஒரிஜினல் நோட்டு என நினைத்துக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் மோகன்ராஜிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு நோட்டுகளை அளித்தது ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் என தெரிய வர அவரை போலீஸார் தேடி வந்தனர். இதற்கிடையே சுரேஷ் மதுரையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சுரேஷை சென்னை கொண்டுவர போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கள்ள நோட்டு விவகாரத்தில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம், கள்ளநோட்டு மாற்றும் கும்பல் பெரிய அளவில் இருக்கலாம் என்பதால் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.