

சனிக்கிழமை காலை தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தருமபுரி மக்களவைத் தொகுதியில் தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். மக்களவைத் தேர்தல் அறிவித்த பிறகு ஓபிஎஸ் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த முதல் பேட்டி இது.
தமிழகத்தில் மோடியுடன் கூட்டணி வைத்திருப்பதற்கான உங்கள் கட்சியின் முக்கிய தேர்தல் அடிப்படை என்ன?
தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் மற்றும் தமிழகம் தொடர்பான விவகாரங்கள் மீது பிரதமர் மோடி சிறப்புக் கவனமும் அக்கறையும் செலுத்துகிறார். அனைத்து மாநிலங்களின் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதில் ஒரு கடினமான, பெருமுயற்சி தேவைப்படும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
பிரதமர் மோடி தனக்கோ, தன் கட்சிக்கோ, அல்லது சில பல தனிநபர்களுக்கோ பயன் ஏற்படும் கொள்கைகளை வடிவமைப்பதில்லை. அவரது கொள்கைகள் அனைவரின் நலன்களுக்குமானது. அவரால் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பொதுமக்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். இடையில் சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. அதை வைத்துதான் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராகப் பேசி வருகின்றன. ஆனால் இவர்கள் திட்டங்கள் எதுவும் வெற்றியடையாது.
ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செய்து வருவதோடு மட்டுமல்லாமல் மேலும் கூடுதல் மக்கள் நலத்திட்டங்களைச் சேர்த்துள்ளது. ஆகவே தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் மத்தியில் பாஜக தலைமை ஆட்சி நீடிக்கவும், மாநிலத்தில் ஜெயலலிதா ஆட்சி நீடிக்கவும் சாதகமாக உள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என்ற விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?
மோடி அரசின் இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சாதி மோதலோ, மதங்களுக்கு இடையிலான மோதலோ ஏற்படவில்லை. எந்த ஒரு மதத்தையும் அச்சுறுத்தும் போக்கும் இல்லை. மாநில அரசைப் பொறுத்தவரையில் நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக செயல்படுகிறோம். சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தியிருக்கிறோம்.
இந்த முறை மக்களவைத் தேர்தலில் உங்கள் கட்சி சில இடங்களில் மட்டும் போட்டியிடுவது உங்கள் கட்சியின் பலவீனத்தின் அறிகுறியா?
தொடக்கம் முதலே மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் உத்தி தேர்தலுக்குத் தேர்தல் மாறுபட்டே வந்துள்ளது. வரும் தேர்தலுக்காக அதிமுக உருவாக்கிய கூட்டணி பலவீனத்தின் பிரதிபலிப்பல்ல. நல்ல பல கட்சிகள் உங்களிடம் கூட்டணி கேட்டு வரும்போது அவர்களையும் உடனழைத்துச் சென்று அவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கியுள்ளோம். எங்கள் கூட்டணிக் கட்சிகளை நாங்கள் சமமாகவே நடத்துகிறோம்.
அதிமுகவின் பலம் தென் மாவட்டங்கள் என்ற நிலையில் அங்கு 3 வேட்பாளர்களை மட்டும் களமிறக்கியது ஏன்?
எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்துக்காக மாநிலம் முழுவதும் நாங்கள் வலுவாகத் திகழவில்லை என்ற பொய்யைப் பரப்ப முயற்சி செய்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டும்தான் கட்சி வலுவாக உள்ளது என்று கூறுவது தவறு. மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணி வலுவாகவே உள்ளது.
சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதை எப்படி விளக்கப் போகிறீர்கள்?
தற்போதைய சூழல் அப்படி. அதனால்தான் குறைவான சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இது சரி செய்யப்படும்.
உங்கள் கட்சியின் மீது அமமுகவின் தாக்கம் என்னவாக இருக்கும்?
அதிமுகவின் எந்த ஒரு தொண்டரும் தினகரன் குழுவுக்குச் சென்றுவிடவில்லை. சில எதிர்ப்பாளர்கள்தான் அவர் பக்கம் சென்றுள்ளனர். அவருக்கு 1% மக்கள் ஆதரவு கூட இல்லை. அவர் சுயநலக் காரணங்களுக்காக கட்சி நடத்துகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும் பிறருடனும் ஏன் அவரால் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்பதற்கான எந்த ஒரு திருப்திகரமான பதிலையும் அவரால் ஒரு மாதகாலமாக (2017 தொடக்கத்தில்) அளிக்க முடியவில்லை.
கருத்துக் கணிப்புகளில் பல வெற்றி வாய்ப்பில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாகக் கூறுகிறதே?
கருத்துக் கணிப்புகள் பல சமயங்களில் தவறாக முடிந்துள்ளன. 2014 லோக்சபா தேர்தலிலும் 2016 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளிலும் இதுதான் நடந்தது. அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்படும் வரை கருத்துக் கணிப்பின் முடிவுகளே இறுதி என்று ஏற்பதற்கில்லை.