Published : 21 Mar 2019 10:49 AM
Last Updated : 21 Mar 2019 10:49 AM

கட்சித் தலைமை சொல்வதற்கு முன்னரே வேட்பாளர்களை அறிவித்த வானதி, எச்.ராஜா

கட்சித் தலைமை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே கோவை தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வானதி ஸ்ரீநிவாசன். இதேபோல் எச்.ராஜாவும் செய்தியாளர்கள் சந்திப்பில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று எதிர்கொள்கிறது.

பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடவுள்ளது.

கட்சி மேலிடம் இன்னும் அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்காவிட்டாலும்கூட தூத்துக்குடியில் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், கோவையில் சி. பி. ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச். ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் என உத்தேசப் பட்டியல் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்  திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற உழைப்போம்..." எனப் பதிவிட்டுள்ளார். கட்சி அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே கோவை தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் என தெரிவித்து ஆதரவு கோரியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவும் பாஜக வேட்பாளர்கள் இவர்கள்தான் என 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார்.

கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆளாளுக்கு இப்படி வேட்பாளர் பட்டியலை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி சென்ற தமிழிசை நேற்று (மார்ச் 20) பட்டியலை அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவருக்கு முன்னதாகவே தனித்தனியாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x