Published : 01 Mar 2019 08:13 AM
Last Updated : 01 Mar 2019 08:13 AM

6 ஆண்டுகளாக துணை தலைவர் இல்லாமல் இயங்கும் மாநில உயர்கல்வி கவுன்சில்: உறுப்பினர்-செயலர் பதவியும் 2 ஆண்டுக்கும் மேலாக காலி

தமிழ்நாட்டில் உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான மாநில உயர்கல்வி கவுன்சில் கடந்த 6 ஆண்டுகளாக முழுநேர துணைத் தலைவர் இல்லாமல் இயங்கி வருகிறது. உறுப்பினர்-செயலர் பதவியும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. முழுநேர துணைத் தலைவர், உறுப்பினர்-செயலர் இல்லாத காரணத்தால் கவுன்சிலில் அனைத்துப் பணிகளும் முடங்கிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதவிவழி அடிப்படையில் கவுன்சிலின் தலைவராக மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் இருப்பார். துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்-செயலராக மூத்த கல்வியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். துணைத் தலைவர் பதவி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுகஅரசு பொறுப்பேற்ற பின்பு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான பேராசிரியை சிந்தியா பாண்டியன் கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். அவர் அந்தப் பணியில் அதிக காலம் நீடிக்கவில்லை.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை வகுப்புத் தேர்வுகள் மற்றும் அசைன்மென்ட்களை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத அனுமதிப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் சிந்தியா பாண்டியன் பதவியை ராஜிநாமா செய்தார்.

அன்று முதல் கடந்த 6 ஆண்டு காலமாக முழுநேர துணைத் தலைவர் நியமிக்கப்படாமல் பொறுப்பு துணைத் தலைவரைக் கொண்டு கவுன்சில் பெயரளவுக்கு இயங்கி வருகிறது. தற்போது உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் துணைத் தலைவர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

துணைத் தலைவர் பதவிக்கு என்ன நேர்ந்ததோ அதேநிலைதான் உறுப்பினர்-செயலர் பதவியிலும் நடந்து வருகிறது. உறுப்பினர்-செயலராகப் பணியாற்றி வந்த பேராசிரியர் கரு.நாகராஜனின் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு நவம்பர் இறுதியில் முடிவடைந்தது. அதன்பிறகு முழுநேரமாக உறுப்பினர்-செயலர் நியமிக்கப்படவில்லை.

தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளே பொறுப்பு உறுப்பினர்-செயலராக இருந்துவருகிறார்கள் தற்போது உயர்கல்வித் துறையின் கூடுதல் செயலர், உறுப்பினர்-செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

முழுநேர துணைத் தலைவர் மற்றும்முழுநேர உறுப்பினர்-செயலர் இல்லாதகாரணத்தால், உயர்கல்வி கவுன்சிலில் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசிடமிருந்து உயர்கல்வி மேம்பாட்டுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான நிதியுதவிகளைப் பெற முடியவில்லை என்றும்கல்வியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கவுன்சில் மூலமாக முதுகலை மாணவர்களின் ஆய்வுப் பணிக்காக தலா ரூ.15,000 வீதம் ஆண்டுதோறும் 200 பேருக்கும், ஆசிரியர்களின் ஆய்வுப் பணிக்காக ரூ.1 லட்சம் வீதம் 50 பேருக்கும் ஆராய்ச்சி நிதி வழங்கப்பட்டு வந்தது.

அதேபோல், கல்லூரிகளில் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நடத்துவதற்கு ரூ.20,000 அளிக்கப்பட்டு வந்தது. மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதற்காக கலைப் பிரிவு, அறிவியில் பிரிவு என 2 காலாண்டு இதழ்கள் வெளிவந்தன. இப்பணிகள் அனைத்தும் தற்போது முடங்கிக் கிடக்கின்றன.

‘ரூசா’ எனப்படும் தேசிய உயர்கல்வி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி, ரூ.20 ஆயிரம் கோடி பெற்று வரும் நிலையில் தமிழகம் வெறும் ரூ.1,000 கோடியையும், ரூ.2,000 கோடியையும் மட்டுமே பெற்று வருகிறது.

இவற்றுக்கெல்லாம் காரணம் கவுன்சிலுக்கு முழுநேர துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்-செயலர் இல்லாததே என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

எனவே, உயர்கல்வித் துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக முழுநேர துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்-செயலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x