Published : 11 Mar 2019 09:34 PM
Last Updated : 11 Mar 2019 09:34 PM

3 தொகுதிகள் இடைத்தேர்தலை நடத்தக்கோரி டெல்லி தேர்தல் ஆணையத்தில் திமுக நாளை மனு

3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கோரி திமுக சார்பில் நாளை தலைமை தேர்தல் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் தொடர்பான தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக உறுப்பினர் சரவணனும் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக கட்சி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

இந்த தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை போட்டு இருந்தார். இது ஜெயலலிதா அனுமதி இல்லாமல் பெறப்பட்ட கையெழுத்து என்று சரவணன் வழக்கு தொடுத்தார்.

அதனால் அந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து இந்த வழக்கு தீர்ப்பிற்காக நிலுவையில் இருக்கிறது.

டிடிவி அணியினர் தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று திருவாரூர் எம்எல்ஏ திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி இரு தொகுதிகளும், ஓசூர் சட்டப்பேரவைத் உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்புக் காரணமாக அந்த் தொகுதியும் சேர்ந்து 21 தொகுதிகள் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதனிடையே நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியானது. அரவக்குறிச்சியில் சுயேச்சை வேட்பாளர் கீதா என்பவர் இரு கட்சிகளும் காசுகொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என வழக்குப்போட்டிருப்பதாகவும், ஒட்டப்பிடாரத்தில் 400 வாக்குகளில் தான் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத கிருஷ்ணசாமி வழக்குப்போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மேற்கண்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை மாற்றக்கோரி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தீர்மானத்தில் “வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று தொகுதி இடைத் தேர்தல்களை நடத்தவில்லை” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமோ, ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.

குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த தகுதி நீக்கம் ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் “தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.”  என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.

மேலும் திமுக சார்பில் நாளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி மனு அளிக்க உள்ளனர். ஏற்கெனவே திருப்பரங்குன்றம் தேர்தல் சம்பந்தமாக வழக்கு போட்டுள்ள திமுக வேட்பாளர் சரவணன் திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் எழுதிய கடிதத்தில், திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன். வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் தள்ளிப்போகிறது. தொகுதி நலன் கருதி வழக்கை திரும்ப பெறுகிறேன். எனது வழக்கறிஞர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு அளித்துவிட்டார். என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x