Published : 02 Sep 2014 10:00 am

Updated : 02 Sep 2014 14:06 pm

 

Published : 02 Sep 2014 10:00 AM
Last Updated : 02 Sep 2014 02:06 PM

உடல் பருக்க மருந்து உண்டா?

நான் மிகவும் மெலிந்திருக்கிறேன். எந்த உணவு சாப்பிட்டாலும் உடல் பருமன் ஆவதில்லை. பொது இடங்களில் இது எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அடைவதற்கு என்ன வழி? ஆயுர்வேதம் இதை எவ்வாறு அணுகுகிறது?

- சிவ முருகன், பட்டிவீரன் பட்டி

மிகவும் மெலிந்திருப்பதாக வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். இது பலருக்கும் உள்ள கவலைதான். ஆயுர்வேத அறிவியல்படி மெலிந்திருப்பதுதான் சிறந்தது. மெலிந்திருக்கிறோமா, பருத்திருக்கிருக்கிறோமா என்பதைவிட ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. இதற்கான சிகிச்சைகள் இரண்டு வகைப்படுகின்றன.

# ஒரு மனிதனைப் பருக்கச் செய்யும் சிகிச்சை

# ஒரு மனிதனை இளைக்கச் செய்யும் சிகிச்சை

உடலுக்கு வலு அளிக்கும் சிகிச்சை ‘பிரம்ஹணம்’ என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பழைய காலத்தில் உடல் வலிவு பெறுவதற்கு மாம்ஸ ரஸம் (மாமிச சூப்), பால், சர்க்கரை, நெய், பகல் உறக்கம், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், நிம்மதியான நித்திரை, கவலையைத் தவிர்த்தல் ஆகியவற்றையெல்லாம் வலியுறுத்தினார்கள். அதேநேரம், இவற்றை அளவுக்கு மீறிச் செய்யக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

உடல் அதிகம் பருத்தால் கொழுப்புக் கட்டிகள், சர்க்கரை நோய், நடக்கும்போது மூச்சு முட்டுதல், வியர்வைக் கோளாறுகள், இதய நோய்கள், ஆண்மைக் குறைவு, கல்லீரலில் கொழுப்பு படிதல் போன்ற பல நோய்கள் வர வாய்ப்புண்டு. கொழுப்பு, கபம் ஆகியவை அதிகம் சேரும். பின்பு இளைக்கச் செய்கின்ற சிகிச்சையை, நாம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஆயுர்வேத அறிவியலில் மாமிசம் உடலுக்கு வலு அளிப்பது போல, மற்றப் பொருட்கள் எதுவும் தருவதில்லை என்றும், மாமிசத்தைத் தின்று வாழும் பிராணிகளின் மாமிசம், மாமிசத்தினால் போஷிக்கப்பட்டதால் விசேஷப் பலனைத் தரும் என்றும் கூறப்படுகிறது. உடல் இளைத்திருப்பவர்களுக்குக் கோதுமை மிகச் சிறந்த உணவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் பருமனாக இருக்க வேண்டும் என்றால் சீரணமாகின்ற சக்தி முறையாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு போஷாக்கு அளிக்கின்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் நெய் சேர்த்துச் சாப்பிடுவது போஷாக்கு தரும். புரதச் சத்து, கொண்டைக் கடலை, பால், பால் பொருட்கள் போன்றவை வலுவை உண்டாக்கும்.

பால்முதப்பன் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு (SafedMusali-asparagus adescendens), நிலப் பூசணி, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட் பருப்பு (Walnut), பிஸ்தா பருப்பு, அத்திப் பழம், சாலாமிசிரி (Orchismascula), வெள்ளரி விதை, பூசணி விதை, முருங்கை விதை, அமுக்குரா, பருத்திப் பால், நெல்லிக் கனி, பேரீச்சம்பழம், முருங்கைப் பூ, முருங்கை பிசின், சர்க்கரை, பசும்பால் ஆகியவை உடல் போஷாக்கு தருபவை.

மேலும் அஸ்வகந்தா (அமுக்குரா - Withaniasomnifera), திராட்சை போன்றவற்றையும் மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம். ஆட்டு மாமிசத்தால் செய்யப்பட்ட சூப், அஜமாம்ஸ ரசாயனம் (ஆட்டு இறைச்சி சேர்ந்தது) போன்றவை அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்றது.

கறுப்பு எள், வேர்க்கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து, உலர்ந்த திராட்சை, பனைவெல்லம் ஆகியவை அனைத்தையும் நன்றாக அரைத்து, தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால், இளைத்த உடல் பருக்கும். அத்துடன் விந்து வீர்யம் அடைந்து, உறவில் நாட்டம் அதிகரிக்கும்.

ஆயுர்வேதத்தில் ச்யவனபிராசம் என்று பிரபல மருந்து உள்ளதே. இதன் மருத்துவக் குணத்தையும் அவசியத்தையும் பற்றி சொல்லுங்கள்.

-சண்முக சுந்தரி, திண்டுக்கல்

ச்யவனபிராசன ரசாயனத்துக்குப் பார்கவ ரசாயனம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இது ஆயுளை அதிகரிக்கும். அறிவுத் திறனைக் கூட்டும். நினைவாற்றலைக் கூட்டும், ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும். வயஸ்தாபனம் என்கின்ற குணமும் உண்டு. Immune modulatory effect உண்டு, Antioxidant property உண்டு. இன்று இது சர்க்கரை சேர்த்தும், சர்க்கரை சேர்க்காமலும் கிடைக்கிறது.

நாள்பட்ட மூத்திரக் கடுப்புக்குச் சிறந்தது. உடலின் அழகைக் கூட்டும். குரல்வளத்தை மேம்படுத்தும். மக்கள் பேற்றை உண்டாக்கும். Mixed connective tissue diseases என்று சொல்கின்ற (Systemic lupus erythematosus - SLE) நோயின் இறுதியில் ச்யவனபிராச ரசாயனத்தை ஒரு வேளை உணவாகக் கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு. நல்ல பலன் கிடைத்துள்ளது. பிராசனம் என்றால் உணவாகச் சாப்பிடுதல் என்று பொருள்.

இதன் முக்கிய மூலப்பொருள் பெரு நெல்லிக்காய். அதை முதன்முதலில் சாப்பிட்டுப் பயன்பெற்றவர் ச்யவனர். அதனால்தான் இளமையை மீட்டுத் தரும் லேகியத்துக்குச் ச்யவனர் முனிவர் பெயர் சூட்டப்பட்டு, ‘ச்யவனபிராஷ்’ ஆனது.

உடல் பருமன்உடல் எடைஎடை பெருக்கம்எடை மெலிவுமருத்துவம்ஆயுர்வேதம்சிகிச்சைபழங்கள்

You May Like

More From This Category

More From this Author