திமுக எம்.எல்.ஏவிடம் ஓடும் ரயிலில் நகை, பணம், செல்போன் திருட்டு: தாம்பரம் இளைஞர் கைது

திமுக எம்.எல்.ஏவிடம் ஓடும் ரயிலில் நகை, பணம், செல்போன் திருட்டு: தாம்பரம் இளைஞர் கைது
Updated on
1 min read

கடந்த மாதம் திமுக கொறடா சக்ரபாணி ரயிலில் வரும்போது அவரிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணம், 2 சவரன் தங்க நகை, செல்போன் உள்ளிட்டவை திருடப்பட்டது. அவற்றை திருடிச் சென்ற நபரை எழும்பூர் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினராகவும்,  திமுக சட்டப்பேரவை கொறடாவாகவும் இருப்பவர் சக்ரபாணி (57). இவர் கடந்த மாதம் 25-ம் தேதி கட்சி அலுவல் சம்பந்தமாக மதுரைக்குச் சென்றுவிட்டு மறுநாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார்.

கூபே டைப் தனிப்பெட்டியில் பயணம் செய்த அவர் பிப்.26 அதிகாலை 4.45-க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அவரது உடமைகளைச் சோதனை செய்தபோது அவரது கையிலிருந்த ரொக்கப் பணம் ரூ. 1 லட்சம், இரண்டு சவரன் மதிப்புள்ள மோதிரம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

இரவில் உறங்கும்போது அவரிடமிருந்து மேற்கண்டவற்றை மர்ம நபர் யாரோ திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸில் சக்ரபாணி எம்.எல்.ஏ புகார் அளித்தார்.

அவரது புகாரைப்பெற்ற போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிசிடிவி கேமரா பதிவு மற்றும் திருடிச் சென்ற செல்போனை போலீசார் ட்ராக் செய்ததில் பணம், நகை, செல்போனை திருடியது தாம்பரத்தை சேர்ந்த கோபால் என்பது தெரிய வந்தது அவரை ரயில்வே போலீசார் இன்று கைது செய்து திருடப்பட்ட உடைமைகளை மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in