

ஆளும் கட்சியினர் வாக்குகளுக்கு, ஊழல் பணத்தை கொடுத்து வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை கைவிடும் அளவிற்கு, தேர்தல் ஆணையத்தின் பணிகள் அமைந்திட உறுதி செய்திட வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக மாநிலங்களவை எம்பி ஆர்.எஸ்.பாரதி தேர்தல் அதிகாரியிடம் அளித்த கடிதம்:
” இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், தேர்தலை நடத்திட வேண்டி பல்வேறு விளம்பரங்களைச் செய்துவிட்டு, அதன் காரணமாக பல்வேறு இடங்களில் தேர்தல் சிறப்புப் பார்வையாளர்கள் அதிரடி சோதனை செய்து வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுத்திடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதை பத்திரிகை வாயிலாக அறிகிறோம்.
ஆனால், ஆளும்கட்சியினர் காவல் துறையைப் பயன்படுத்தியும், ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திட ஏற்பாடுகள் செய்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்தும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற சோதனையின் போது, ரூ. 15 கோடி பணம் கைப்பற்றப்பட்டது என்பதை ஊடகச் செய்தி மூலம் அறிந்தோம். ஆனால், அந்தப் பணம் பெங்களூருவைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசனுக்கும், உள்ளாட்சி அமைச்சரின் உதவியாளர்போல் இருக்கும் சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் சரவணன் ஆகியோருக்கும் அதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் மாதம் 25 கோடி ரூபாய் சபேசனுடைய வங்கிக் கணக்குக்கு ரொக்கமாக அனுப்பப்பட்டது என்றும் இந்தச் செயல்கள் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உகந்தவை என்று அறிந்தும், சுமார் ஒன்றரை மணிநேரத்தில், அத்தனை சோதனைகளும் நிறுத்தப்பட்டு, அதிகாரிகளின் மேல்நடவடிக்கை திரும்பப் பெற்றதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிகிறோம்.
இந்நிலையில், 29-ம் தேதி நள்ளிரவு தி.மு.கழக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் இருந்தபோது, அவருடைய வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாமல், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வருமானவரி சோதனையா? (அல்லது) தேர்தல் பணி நிமித்தமான சோதனையா? என்று தெரிவிக்காமல் அவர் வீட்டில், சோதனை என்ற பெயரில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். இந்த சோதனை மூலம் அவர் "அப்பழுக்கற்றவர்" என்பதை தேர்தல் ஆணையம் உலகிற்கு உணர்த்தியமைக்கு நன்றி.
இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய மற்றும் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியினர் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணமாக இந்தச் சம்பவம் இருக்கிறது. திமுகவிற்கு எத்தனை சோதனை வந்தாலும், ஜனநாயகத்தை மட்டும் நம்பி, தேர்தலில் நிற்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால், திமுக அஞ்சிடப் போவதில்லை. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள், ஜனநாயகத்திற்கும் அதன் மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கிறது என்பதுதான் எங்களின் வருத்தமாகும்.
இனிவரும் காலங்களிலாவது ஆளும்கட்சியினர் வாக்குகளுக்கு, ஊழல் பணத்தை கொடுத்து வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை கைவிடும் அளவிற்கு, தேர்தல் ஆணையத்தின் பணிகள் அமைந்திடவும், ஆணையத்தின் கொள்கையான நியாயமான, நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்பதை உறுதி செய்திட வேண்டுகிறோம்” இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.