Published : 07 Mar 2019 01:14 PM
Last Updated : 07 Mar 2019 01:14 PM

காமராஜரின் பெயரை உச்சரிக்கக் கூட பிரதமர் மோடிக்கு தகுதி கிடையாது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

காமராஜரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த பிரதமர் மோடிக்கு காமராஜரின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியில்லை என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவிலேயே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு மக்களிடையே எதிர்ப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தேர்தல் அறிவிப்பு வெளியிட இருக்கிற ஒருசில நாட்களுக்கு முன்பாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே கவர்ச்சிமிக்க திட்டங்களை மக்கள் நலத் திட்டங்கள் என்ற போர்வையில் எந்தவிதமான நிதியும் ஒதுக்காமல் அறிவித்து வருகிறார். இதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

பிரதமர் மோடி உரையின் தொடக்கத்திலேயே தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பேசுகிறார். ஆனால் இவர் பங்கேற்கிற எந்த நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் பாட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதில்லை. இதன்மூலம் தமிழ்த்தாயை இழிவுபடுத்தி வருகிறார்.

அதேபோல, தேசபக்தி குறித்து ஊருக்கு உபதேசம் செய்கிற நரேந்திரமோடி பங்கேற்கிற நிகழ்ச்சியில் தேசியகீதம் பாடப்படுவதில்லை. இதன்மூலம் தேசபக்தியை கொச்சைப்படுத்தி வருகிறார்.

இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபட்ட பிரதமரை இதுவரை இந்தியா கண்டதில்லை. மேலும் ஜெயலலிதா கண்ட கனவு குறித்து குறிப்பிடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா, லேடியா என்று நரேந்திர மோடியை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்தவர் ஜெயலலிதா என்பதை மோடி மூடி மறைத்தாலும் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

அடுத்து மோடி தமது உரையில் காமராஜரை மத்திய காங்கிரஸ் தலைமை அவமதித்து விட்டதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி புலம்பியிருக்கிறார். காந்திக்கும், காமராஜருக்கும் இருந்த உறவை நரேந்திர மோடியால் புரிந்து கொள்ள முடியாது. ராஜாஜி மீது காமராஜர் வைத்திருந்த மதிப்பும், மரியாதையையும் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை. விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஏஜெண்டுகளாக இருந்த ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் வரலாறு தெரியாது.

1966 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மதவெறியர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் அன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் தங்கியிருந்த ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையாளர்கள் காமராஜரை கொலைவெறி தாக்குதலோடு வீட்டிற்குள் புகுந்த போது காமராஜர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

அன்று காமராஜரை கொல்ல சதித் திட்டம் தீட்டியபோது பெரியார் அவர்கள் கத்தியை எடுப்போம், காமராஜரை காப்போம், கோட்சே கும்பல் கொட்டத்தை கூண்டோடு கருவறுப்போம் என்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் முழங்கியது நரேந்திர மோடிக்கும் தெரியாது, இன்றைய அதிமுக தலைமைக்கும் தெரியாது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த நரேந்திர மோடிக்கு காமராஜரின் பெயரை உச்சரிக்க கூட தகுதி கிடையாது.

மேலும், அதேபோல, நாட்டின் பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது தான் தமது அரசின் நோக்கம் என்கிறார் நரேந்திர மோடி. ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பிரான்ஸ் அரசோடு தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அடிப்படையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெங்களூருவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் விமானங்களை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் போட்டது.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு தன்னிச்சையாக முறையான எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் முன்னூறு சதவீதம் அதிக விலை கொடுத்து விமானங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது.

ரஃபேல் ஊழலை மூடி மறைக்க நரேந்திர மோடி அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளை தகர்த்து தரைமட்டமாக்கி புகழ் பெற்ற ஆங்கில நாளேடான 'தி இந்து' பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆதாரங்களை வெளியிட்டதற்காக 'இந்து' பத்திரிகை நிறுவனத்தின் மீதும், ஆசிரியர்கள் மீதும் வழக்கு தொடுப்பதற்கு மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது.

குறிப்பாக 'இந்து' குழுமத்தின் தலைவர், பத்திரிகை உலகின் ஜாம்பவானாக திகழ்கிற என். ராம்-ஐ பழிவாங்குவதற்கு பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய பாதுகாப்பை தாரை வார்த்து அனில் அம்பானிக்கு ஆதாயம் வழங்குவதற்காக நரேந்திர மோடி செய்த ஊழலை எதிர்த்து குரல் கொடுத்து வரும் 'இந்து' பத்திரிகைக்கு பின்னாலே நாட்டு மக்கள் அணி திரண்டு நிற்பார்கள் என்பது உறுதி.

அதேநேரத்தில் மத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து துணிச்சலுடன் செய்தி வெளியிட்டு வரும் என். ராம்-ஐ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நெஞ்சார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

எனவே, தமிழக மக்களை கவருவதற்காக அதிமுக துணையோடு பல்வேறு ஜால வித்தைகளை செய்து வரும் நரேந்திர மோடியை தோலுரித்து காட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிகிறார். அந்த கூட்டத்தில் நரேந்திர மோடியின் வாதங்களை காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் மக்கள் மன்றத்தில் முறியடித்துக் காட்டுவார்கள்" என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x