Published : 09 Mar 2019 11:07 AM
Last Updated : 09 Mar 2019 11:07 AM

நாளை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்: முக்கிய அம்சங்கள்

நாளை தமிழகம் முழுவதும், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை (மார்ச் 10) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் மூலம் இம்மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதர நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ ஒழிப்பு பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

முக்கிய அம்சங்கள் :

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 10.03.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். 

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் மற்றும் மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் 1,652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீவிர போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 15 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x