

‘தி இந்து’வில் வெளியான நீர், நிலம், வனம் தொடரின் எதிரொலி யாக, 50 ஆண்டுகள் கழித்து தனுஷ்கோடிக்கு நெடுஞ்சாலை அமைய உள்ளது.
பரபரப்பாக இயங்கிக்கொண் டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயில் நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும் இதமான காற்றும், சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் என்றிருந்த பழம்பெரும் துறைமுக நகரமான தனுஸ்கோடியை 1964 டிச. 22-ம் தேதி இரவு கோரப்புயல் தாக்கி இந்தியாவின் தேசப் படத்திலிருந்து கிழித் தெறிந்தது.
புயல் வீசிய சமயம் தனுஷ்கோடியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்கு இடம் மாறினர். புயலுக்கு முன்னர் பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்ற 'போட் மெயில்’ ரயிலை புயல் மிச்சம் வைத்தது வெறும் இரும்பு சக்கரங்களை மட்டுமே. இந்த ரயிலில் பயணித்தோர் அனைவரும் உயிரிழந்தனர்.
புயலடித்து 50 ஆண்டுகள் ஆண்டுகள் கடந்த பின்னரும் தனுஷ்கோடியைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடிநீர், மருத்துவம், மின்சாரம் என எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தனுஷ்கோடியில் இயங்கும் ஒரே அரசு நிறுவனம் என்றால் அது நடுநிலைப் பள்ளி மட்டும்தான்.
ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்ல மூன்றாம்சத்திரம் வரை மட்டுமே சாலை வசதியுள்ளது. மூன்றாம்சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 5 கிலோ மீட்டர் கடலில் மணலில் நடந்தேதான் செல்ல வேண்டும். பிரசவ கால அவசரம் என்றால்கூட போக்குவரத்து வசதி இல்லாமையால் படகுகளின் மூலம்தான் ராமேசுவரம் மருத்துவமனைக்கு வரவேண்டியுள்ளது என்கின்றனர் தனுஷ்கோடி மக்கள்.
இதுகுறித்து `தி இந்து’ நடுபக்க தொடர் கட்டுரையான நீர், நிலம், வனம் பகுதியில் தொடர்ச்சியாக தனுஷ்கோடியின் அவலம் குறித்து பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ராமேசுவரம் மூன்றாம் சத்திரத்தில் தனுஷ்கோடி நெடுஞ்சாலை அமைக்க கருங்கற்கள் மற்றும் பாறாங்கற்கள் குவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரூ.57 கோடி மதிப்பில் முகுந்தராயர் சத்திரம்- தனுஷ்கோடி-அரிச்சல்முனை வரையிலும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கான டெண்டர் விடும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. முதற்கட்டமாக ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.அதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் சாலை அமைக்கும் பணி தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னர் தொடங்கப்படும்’’ என்றார்.