Published : 05 Mar 2019 09:11 PM
Last Updated : 05 Mar 2019 09:11 PM

எங்களை குற்றவாளிகள் போல் சித்தரித்துவிட்டனர்: உயர் நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் குற்றச்சாட்டு

ஆறுமுகசாமி ஆணையத்தின் செயல்பாட்டால் தாங்கள் குற்றவாளிகள் போல் சித்தரிக்கப்பட்டதாகவும், தங்கள் மதிப்பு குறைந்துவிட்டதாகவும் அப்போலோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் முதலானோர் சர்ச்சை கிளப்ப, அது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

விசாரணையில் அப்போலோ நிர்வாகம் மற்றும் மருத்துவர்களையும் தொடர் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையின்போது அப்போலோ நிர்வாகம் ஆட்சேபம் தெரிவித்தது.

இதையடுத்து ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து தங்கள் மருத்துவர்களிடம் ஆணையம் விசாரிக்க தடை கோரியும், மருத்துவர்கள் அடங்கிய குழுமூலம் விசாரணை நடத்தவேண்டும் எனக்கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் நடந்து வருகிறது. இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலோ தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது வாதத்தில் ஆணையத்தின் செயல்பாடு குறித்து ஆட்சேபத்தை பதிவு செய்தார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பிரபல மருத்துவர்களை போதுமான கால அவகாசம் வழங்காமல் உடனே ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கட்டாயபடுத்துகிறது,

மருத்துவர்கள் ஆஜராகாவிட்டால், மருத்துவமனை இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்கள் மூலமாக தங்கள் தரப்பை மிரட்டுவதாக  தெரிவித்தார். போதிய மருத்துவ நிபுணத்துவம் இல்லாத ஆணையத்தின் இந்த செயல்களால் அப்போலோ மருத்துவமனையின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

சிகிச்சை நேரத்தில், ஜெயலலிதா வெறும் பழரசங்கள் மட்டுமே அருந்தியதாகவும்,  சிகிச்சை அளிக்கப்பட்ட 75 நாட்களும் அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் ஆட்கள்,  காவல்துறையினர் என நூற்றுக்கணக்கானோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது.

அதனால்தான்  உணவு கட்டணம் 1 கோடியே 15 லட்சம் ஆனதாக அப்போலோ நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆணையத்தின் இந்த செயல்பாட்டால் அப்போலோ நிர்வாகம் மற்றும் சசிகலா ஆகியோர் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களாகும் நிலை ஏற்பட்டுள்ளது என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்  பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

தங்கள் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x