Last Updated : 06 Mar, 2019 04:06 PM

 

Published : 06 Mar 2019 04:06 PM
Last Updated : 06 Mar 2019 04:06 PM

வெளிநாடுகளில் தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சி கூட தமிழகத்தில் எடுப்பதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை

தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தினமும் 10 நிமிடம் ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை தெரிவித்துள்ளது.

மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. மதுரை உலக தமிழ்ச்சங்க சிறப்பு அலுவலர் கே.எம்.சேகர் பதில் மனு தாக்கல் செய்தார்.

விசாரணையின் போது நீதிபதிகள், தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச்செல்வது வெளிநாடுகளில் தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சி கூட, தமிழகத்தில் எடுப்பதில்லை. பிற மாநிலங்களில் தமிழ் வழிப்பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறதா? தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் வளர்ச்சிக்காக தினமும் பத்த நிமிடங்கள் ஒதுக்கினால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்காக அனைத்து தமிழ் சேனல்களையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. இது தொடர்பாக டிவி சேனல்கள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணை மார்ச் 13-ல் ஒத்திவைக்கப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x