Published : 01 Mar 2019 07:44 PM
Last Updated : 01 Mar 2019 07:44 PM

ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்துக்கு பின்னடைவு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடையை நீக்கக்கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மார்ச் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு கட்டங்களைக்கடந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. பல்வேறுகட்ட வாதங்களை அடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என்றும், மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்றும் கூறி தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கபட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அவர்களது வாதத்தில், ”1996-ல் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆலையை மூட வேண்டும் என்கிற பல நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் சந்தித்துள்ளது.

அதேபோல, மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன் தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலையை மூட வேண்டும் உள்ளிட்ட 11 உத்தரவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஆலையை திறக்கலாம் என அறிக்கை அளித்தது.

அதை தேசிய பசுமை தீர்ப்பாயமும் உறுதி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆலை அமைந்துள்ள பகுதியிலும் சுற்றியுள்ள பகுதியிலும் நிலத்தடி நீரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவில்லை, உப்பாறு நதியில் கழிவுகள் கலக்கவிடப்பட்டது, அபாயகரமான கழிவுகள் மேலாண்மை வசதியை ஏற்படுத்தவில்லை.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றவில்லை போன்ற காரணங்களை கூறி ஆலை உரிமத்தை புதுப்பிக்க முடியாது என உத்தரவிடப்பட்டதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் பாய்லர் உரிமம், தொழிற்சாலை உரிமம், ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.” என தெரிவித்தார்.

அபாயகரமான கழிவு மேலாண்மையை பொறுத்தவரை, அனல் மின் நிலையம் 7 சதவீத சல்பர் டை ஆக்ஸைடு வெளியேற்றும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் 1 சதவீதம் மட்டுமே வெளியேற்றுகிறது என தெரிவித்தனர். நாட்டின் 38 சதவீத தேவையை பூர்த்தி செய்யும் ஆலையால் 40 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவதாகவும், 2 ஆயிரம் கோடி ரூபாய் வரியாக செலுத்தப்படும் நிலையில் ஆலை மூடப்பட்டதால் ஆயிரத்து 380 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியை சேர்ந்த 50 ஆயிரம் மக்கள் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அகர்வால் குழுவிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆலையை மாவட்ட ஆட்சியர் முறையாக பராமரிக்கவில்லை என்றும், ஆலை பற்றிய தொழில்நுட்ப அறிவு இல்லை என்பதால் வழக்கு முடியும் வரை ஆலையை இயக்க போவதில்லை என்றும், ஆலையை பராமரிக்கவும், நிர்வாக கட்டிடத்தை பயன்படுத்தவும், மின் இணைப்பு வழங்கவும் இடைக்கால உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அப்போது நீதிபதிகள், தற்போது  ஆலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆலையை பராமரிக்க முடியுமா என்றும், 2018 மார்ச் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி, அரசு அறிக்கை அளித்ததா என்றும், சுற்றுச்சூழல் சேதம் ஏதேனும் நடந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் மற்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

அவர்கள் வாதத்தில், ”அரசு தரப்பு அறிக்கையை உச்ச நீதிமன்ற வழக்கில் தாக்கல் செய்துள்ளதாகவும், மொத்த முதலீடு 3000 கோடி செய்துள்ள நிலையில் அதற்கு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாசு ஏற்படுத்தியதால் மூட உத்தரவிடப்பட்டதாகவும், 28 ஆயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், துணை ஆட்சியர் தலைமையில், மாநகராட்சி ஆணையர், தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குனரக இணை இயக்குனர் அடங்கிய உள்ளூர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு அபாயகரமான கழிவுகள் மேலாண்மையை மேற்பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மே 28-க்கு பிறகு அரசு கட்டுப்பாட்டில் உள்ள காலத்தில் ஆலையில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டு, வழக்கு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதுவரை வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க கூடாது என வாதிட்டார்.

தூத்துக்குடி பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்பாளர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை, வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், நன்மாறன் ஆகியோர் ஆஜராகி வழக்கில் இணைய மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்தாலும், மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தூத்துக்குடி மக்கள் நீதிமன்ற த்தை அணுக வேண்டும். வழக்கை மதுரை கிளைதான் ஏற்றது என்பதால் வழக்கை மதுரைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

எந்த அமர்வு விசாரிக்க வேண்டுமென ஒரு கார்பரேட் நிறுவனமோ, அதற்காக வாதிடும் வழக்கறிஞர்களோ முடிவு செய்யக்கூடாது என்றும், சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு என்பதால் மக்களுக்கு ஏதுவான இடத்தில் விசாரிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். இணைப்பு மனுதாரர்களின் கோரிக்கையை இடைக்கால மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வேதாந்தா குழும மனுவில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.

வழக்கு குறித்து தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x