

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், சென்னையில் எம்ஜிஆர் சமாதியின் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அண்ணாசதுக்கத்தில் உள்ள எம்.ஜி. ஆர். நினைவிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கலைராஜன் தலைமையில் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத் தில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சாந்தி, சுந்தரராஜன், தமிழ் அழகன், கணேஷ்குமார் உட்பட அதிமுக மாவட்ட நிர்வாகிகள், மகளிர், இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவாயி லில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் நீதிபதி டி. குன்ஹா ஆகியோர்களுக்கு எதிராக கோஷம் போடப்பட்டது.
இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன் கூறுகையில், ''ஜெயலலிதாவை விடுதலை செய்யும் வரை போராட்டம் நடத்துவோம். எங்கள் கட்சியின் போராட்டம் பொது மக்களுக்கு இடையூறாக இல்லாமலும் சத்தியாகிரக வழியில் இருக்கும்'' என்றார்.