Published : 06 Sep 2014 12:00 PM
Last Updated : 06 Sep 2014 12:00 PM

என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு இடைக்காலத் தடை

நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது.

முன்னதாக என்.எல்.சி. நிறுவனத்தின் மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் எம்.மகேஸ்வரன் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது. பதிவு மூப்பு அடிப்படையில் முதலில் 200 ஒப்பந்தத் தொழிலாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக அழைக்கப்பட்டனர்.

எனினும் எல்லா ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மாதம் குறைந்தது ரூ.25 ஆயிரம் ஊதியமாக எல்லா ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 18 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தன. இதனையடுத்து மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் கடந்த ஆகஸ்ட் 25, செப்டம்பர் 2-ம் தேதிகளில் சமாதானக் கூட்டம் நடத்தினார். மீண்டும் அந்தக் கூட்டம் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 3-ம் தேதி இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு 14 நாள்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தொழிற்சங்கத்தினர் கொடுத்த வேலை நிறுத்த நோட்டீஸில் எந்த தேதியில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில்

ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் வாயில் கூட்டம் உள்பட பல போராட்டங்களை தொழிற் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

என்.எல்.சி. நிறுவனத்தின் மின் நிலையங்களிலிருந்து தற்போது 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டுக்கும், தென்னிந்திய மின் தொகுப்புக்கும் இந்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றால் அதன் காரணமாக நிறுவனத்தின் சுரங்கப் பணிகள் மற்றும் மின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்.

மேலும், பல தொழிலாளர்கள் வேலைக்கு வர தயாராக இருந்தும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தங்களுக்கு பாதிப்பு வரலாம் என்ற பயம் காரணமாக வேலைக்கு வராத நிலை உள்ளது.

ஆகவே, தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த மனு தொடர்பாக தொழிற்சங்கத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x