Published : 16 Mar 2019 10:32 AM
Last Updated : 16 Mar 2019 10:32 AM

மாசறு பொன்னே வலம்புரி முத்தே!: `எமரால்டு’ ஜுவல் இண்டஸ்ட்ரி’ தலைவர் கே.சீனிவாசன்

சின்ன வயசுலேயே பெரிய ஜுவல்லரி தயாரிப்பாளராக மாறனும்னு இலக்கு நிர்ணயிச்சேன். காலேஜ் படிக்கும்போதே கம்பெனிக்கு பேர் வெச்சேன். ஒரு கடையில் 150 ரூபாய் சம்பளத்துக்கு தொடங்கிய பயணம், உலகின் முன்னணி நகை தயாரிப்பு நிறுவனங்கள்ல ஒண்ணா மாறியிருக்குன்னா, அதுக்கு காரணம் இலக்கை அடையணுங்கற வெறி, தொடர் முயற்சி, கடின உழைப்பு, 100 சதவீதம் அர்ப்பணிப்பு இருந்தா, யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில சாதிக்கலாம்” என்கிறார் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி நிறுவன தலைவர் கே.சீனிவாசன்.

மாசில்லாத தங்கம், தரமான நகைகள், மற்றவர்களைக் காட்டிலும் சிறந்த டிசைன் என்ற கொள்கைகளைக் கொண்டு, ஒரு ஊழியருடன் தொடங்கப்பட்ட எமரால்டு நிறுவனம், கடந்த 35 ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தாலும், எந்த சூழ்நிலையிலும் இந்தக் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதில்லை என்று விடாப்பிடியாக இருக்கிறது. தங்கத்தில் தொடங்கி, வைரம், பிளாட்டினம், வெள்ளி என நகை உற்பத்தியில், சர்வதேச அளவில் முன்னணியைப் பெற்றுளள எமரால்டு நிறுவனத்தின் உரிமையாளர் கே.சீனிவாசனை சந்தித்தோம்.

“பூர்வீகம் பொள்ளாச்சி அருகேயுள்ள உடையகுளம். இந்த சின்ன கிராமத்துல, ஏழெட்டு குழந்தைகளோட இருக்கற வறுமையான குடும்பம். பெற்றோர் கிருஷ்ண

மூர்த்தி-சரஸ்வதி. பிழைப்பு தேடி குடும்பத்தோட கோயம் புத்தூருக்கு வந்த அப்பா, பெரியகடைவீதியில தங்க முலாம் பூசற கடையில வேலைக்கு சேர்ந்தாரு. நாங்க 6 குழந்தைங்க. அப்பா வோட நண்பர் ராமச்சந்திரன். நாங்க மாமானு கூப்பிடுவோம்.

தவிக்க விட்டுச் சென்ற அப்பா!

நான் வைஸ்யாள் வீதி காந்தி பள்ளிக்கூடத்துல படிச்சேன். ரெண்டாவது படிக்கும்போது திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து, அப்பா தவறிட்டாரு. கலங்கிப் போன எங்க குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன மாமா ராமச்சந்திரன், எங்களை படிக்க வெச்சாரு. அண்ணனுங்க வேலைக்குப் போனாலும், வறுமை மாறலை. எங்கிட்ட 2, 3 செட் துணி மட்டும்தான் இருக்கும். சில சமயம் செருப்புகூட இருக்காது. அக்கம்பக்கத்துல வசதியா இருக்கறவங்களைப் பார்க்கும்போது, நாம மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்னு தோணும். நல்லா படிச்சி, இன்ஜினீயராகி நம்ம குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவரணும்னு விருப்பப்பட்டேன். சிஎஸ்ஐ ஸ்கூல்ல 11 முடிச்சேன். நல்ல மார்க் கிடைத்தும், பாலிடெக்னிக் படிக்கக்கூட இடம் கிடைக்கலை. இதனால, வெள்ளக்கிணறு அரசுப் பள்ளியில 12-ம் வகுப்பு முடிச்சி, சிபிஎம் கல்லூரியில பி.எஸ்சி. கணிதம் படிச்சேன்.

அந்த சமயத்துல, கோவையில தங்க நகை தயாரிப்புத் தொழில் உச்சத்துல இருந்தது. இந்த தொழில்ல இருந்தவங்க பணக்காரங்களாக இருந்தாங்க. அதனால, நாமும் சீக்கிரம் முன்னேறணும்னா , தங்க நகை தயாரிப்பாளராக மாறணும்னு இலக்கு நிர்ணயிச்சேன். நாங்களும் கூட சேர்ந்து பயணிப்போம்னு சில நண்பர்கள் சொன்னாங்க. விளைட்டா கம்பெனி பேரை எமரால்டுனு வெச்சேன். அப்ப, எமரால்டுனா என்னானுகூட தெரியாது. கல்லூரிப் படிப்பு முடிஞ்சவுடன், நண்பர்கள் எல்லாம் வெவ்வேறு வேலைக்குப் போயிட்டாங்க.

ரூ.150 சம்பளத்தில் வேலை...

ஆனா, நான் தங்க நகை தொழில் தொடங்கறதுல உறுதியாக இருந்தேன். ‘நீ டிகிரி படிச்சிருக்கிற, பேங்க்குல வேலைக்குப் போகலாம். நகைக் கடையில வேலைக்குப் போனா கடையை கூட்டணும், டீ வாங்கித் தரணும், இது தேவையா?’ வீட்டுல கேட்டாங்க. இதையெல்லாம் நான் ஏத்துக்கல. பிடிவாதமா இருந்தேன். 1983-ல ஒரு ஜுவல்லரி கடையில 150 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தேன். எல்லா வேலையும் செய்ய சொன்னாங்க. கூச்சப்படாம செஞ்சேன். என்னோட வேலையைப் பார்த்துட்டு, ஒரே மாசத்துல வெள்ளி நகை பிரிவுக்கு மாத்தினாங்க. பல கணக்கு வழக்கெல்லாம் நான் சொல்லிக்கொடுத்தேன். அதனால, தங்க நகை பிரிவு பொறுப்பு கொடுத்தாங்க.  என்னோட ஆர்வம் காரணமா, நல்லா பிசினஸ் செஞ்சேன். இதெல்லாம் 10 மாதம்தான்.

வழிகாட்டிய வழிப்போக்கர்!

நாம தனியா கடை போடணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தேன். ஒரு நாள் வழிப்போக்கர் ஒருத்தரை சந்திச்சேன். குஜராத்தியும், இந்தியும் மட்டுமே தெரிஞ்ச அவரு, மொழிப் பிரச்சினையால தடுமாறிக்கிட்டிருந்தாரு. நான் பள்ளியில படிக்கும்போதே காலையில டைப்ரைட்டிங், இரவுல இந்தி டியூஷன்னு கத்துவெச்சிருந்தேன். அதனால, அந்த வழிப்போக்கர்கிட்ட இந்தியில பேசி, வழி சொன்னேன். அவரு, `ரொம்ப டயர்டா இருக்கு, ஒரு காபி சாப்பிடலாமா`னு கேட்டாரு. `எங்க அண்ணன் கடை பக்கத்துலதான் இருக்கு. அங்க உட்கார்ந்து, காபி சாப்பிடலாம் வாங்க`னு கூட்டிக்கிட்டுப் போனேன். என்னோட பேசிக்கிட்டிருந்ததுல, என்னை அவருக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு.

`நீ நல்லா இந்தி பேசற, அகமதாபாத் வா, உனக்கு நகை ஆர்டர் கொடுக்கறேன்`னு சொன்னாரு. அவர் மேல ஒரு சதவீதம்கூட எனக்கு சந்தேகம் வரலை. அவர் சொன்னதை முழுமையாக நம்பினேன். சில நாட்கள்ல அகமதாபாத் போக ரெடியாகிட்டேன். வீட்டில இருந்தவங்க தயங்கினாங்க. ‘அவ்வளவு தூரம் போற, உனக்கு ஏதாவதுன்னா யார் உதவி செய்வாங்க?. அதனால போக வேண்டாம்’னு சொன்னாங்க. ஆனா, இந்த வாய்ப்பை நழுவவிட நான் தயாராக இல்ல. போயே தீருவேன்னு பிடிவாதமா இருந்தேன்.

அம்மா கொடுத்த ரூ.10,000...

 தங்க நகை சாம்பிள் எடுத்துக்கிட்டுப் போகணும். அம்மா கிட்ட உதவி கேட்டேன். ‘என்னோட மகன் மேல வரணும். எங்கிட்ட சேமிப்பா ரூ.10 ஆயிரம் இருக்கு. அதைத் தர்றேன்’னு ஆசீர்வாதம் செஞ்சி, பணத்தைக் கொடுத்தாங்க. ஆனா, இது எப்படி போதும்? அண்ணனுங்க, நண்பர்கள்னு கொஞ்சம் கடன் வாங்கினேன். ஒரு 250-300 கிராம்ல தங்கம் வாங்கி, சாம்பிள் நகைகளை செஞ்சேன். அப்பவெல்லாம் சாம்பிள் நகைகள் செய்யும்போது, சுத்தம், தரம், டிசைனைப் பத்தியெல்லாம் கவலைப்படமாட்டாங்க. ஆனா, ஆரம்பமே சரியாத்தான் இருக்கனும்னு நெனச்சி, சுத்தமான தங்கம், நல்ல தரம், சிறந்த டிசைன்ல சாம்பிள் நகைகளை செஞ்சி எடுத்துக்கிட்டு, அகமதாபாத் புறப்பட்டேன்.

என்னை வரச் சொன்ன ப்ரான்ஜீவன் தாஸ் ஜவேரி,  ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து கூட்டிக்கிட்டுப் போனாரு. அவர்கிட்ட நான் கொண்டுபோன சாம்பிள் நகைகளை காட்டினேன். `இந்த மாடல் நகைகள் எனக்கு வேண்டாம்`னு அவர் சொல்லிட்டாரு. ஒரு நிமிஷம் திகைச்சிப் போயிட்டேன். `கடன் வாங்கி, நகை செஞ்சி கொண்டாந்திருக்கேன். இதை வித்துட்டுத்தான் ஊருக்குப் போகணும். விக்கறதுக்கு ஹெல்ப் பண்ணுங்க`னு அவர்கிட்ட கேட்டேன். கவலைப்படாதே, என்னோட மருமகன் இந்த மாதிரி நகைகளை வாங்கிக்குவாருனு சொல்லி, அவர் மருமகன் கிட்ட அறிமுகம் செஞ்சி வெச்சாரு. அவரு எல்லா நகைகளையும் வாங்கிக்கிட்டு, தங்கம் கொடுத்தாரு. அதுமட்டுமில்லாம, ஆர்டரும் கொடுத்தாரு.

அங்கிருந்து கோயம்புத்தூர் திரும்பி வந்து, மீண்டும் அகமதாபாத்துக்கு நகைகளோட  போனேன். இப்படி நகைகள் விற்பனை செஞ்சதுல, நல்ல லாபம் கிடச்சது. பைனான்ஸ்ல கடன் வாங்கி, தங்கம் வாங்கி, நகைகள் செஞ்சி கொண்டுபோனேன். இந்த சமயத்துல தங்கம் விலை உயர்ந்தது. அதனால, எனக்கு நல்ல லாபம் கிடைச்சது. நேர்மையா, நாணயமா இருந்ததால, ப்ரான்ஜீவன் தாஸ் ஜவேரிக்கு எம்மேல நம்பிக்கை வந்தது. `இன்னும் நிறைய நகை கொண்டு வா`னு அவரு சொன்னாரு. `அந்த அளவுக்கு எங்கிட்ட முதலீடு இல்லீங்க’னு நான் சொன்னேன். அப்ப அவரு, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து தங்கமும், ஆர்டரும் வாங்கித் தர்றேன்னு சொல்லி, பாம்பே கூட்டிக்கிட்டுப் போனாரு. அங்கு ஒரு பெரிய நகைக் கடைக்கு கூட்டிக்கிட்டுப்போய், `இது என்னோட மகன். இவருக்கு எவ்வளவு  தங்கம் கொடுத்தாலும், அதுக்கு நான் கேரண்டி’னு சொல்லி, ஆர்டர் வாங்கிக் கொடுத்தாரு. ரோட்டுல பாத்துப் பழகின  என்னை, மகன்னு சொல்லி அறிமுகம் செஞ்சி வெச்சாரு. நாம நேர்மையா, நாணயமா இருந்தா, முகம் தெரியாதவங்களும் உதவுவாங்க” என்று கூறியபோது, சீனிவாசனின் கண்கள் கலங்கின.

அதே நெகிழ்ச்சியுடன் தொடர்ந்து பேசத் தொடங்கினார். “பாம்பேல எனக்கு ஒரு கிலோ, ரெண்டு கிலோ தங்கம் கொடுத்து, நகை ஆர்டர் கொடுத்தாங்க. அடுத்த என்னை டெல்லிக்கும் கூட்டிக்கிட்டுப் போய், ஆர்டர் வாங்கிக் கொடுத்தாரு.

தவறாக நினைத்த குஜராத் போலீஸ்!

ஒருமுறை குஜராத்துல இரவு நேரத்துல என்னை போலீஸ் பிடிச்சிட்டாங்க. 36 மணி நேர டிராவல்ல கசங்கிப் போயிருந்த என்னை, திருடன்னு நெனச்சிட்டாங்க. என்கிட்ட இருந்த வவுச்சர், ரசீதுனு எல்லாத்தையும் காண்பித்தும், அவர்கள் என்னை நம்பலை. என்னோட `காட் ஃபாதர்’ ப்ரான்ஜீவன் தாஸ் ஜவேரி தகவல் கிடைச்சு, நள்ளிரவு நேரத்துலேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு  வந்து, இது என்னோட மகன்தான்னு சொன்னாரு. அடுத்த நாள் நீதிமன்றத்துல அனுமதி வாங்கிட்டு, என்னை விட்டுட்டாங்க. என்னைய தப்பா நெனச்சிட்டதாகவும் சொல்லி, வருத்தப்பட்டாங்க. ஊருக்கு வந்ததுக்கப்புறம், `நாங்க ஏற்கெனவே சொன்னோம்தானே? உனக்கு ஏதாவதுன்னா என்ன பண்ணுவோம்?’ இந்த ரிஸ்க் தேவையா?னு’ வீட்ல இருந்தவங்க கேட்டாங்க. நான் எந்த தப்பும் செய்யாதவன். இது மாதிரி சோதனையெல்லாம் வரத்தான் செய்யும். அதை நான் கடந்துபோவேன்னு சொல்லி, அவங்களை சமாதானப்படுத்தினேன்.

ரெண்டு, மூணு மாசத்துலேயே அம்மா கொடுத்த ரூ.10 ஆயிரத்துக்குப் பதிலா, நகைகளா கொடுத்தேன். அம்மா நெகிழ்ந்துபோய், `ரொம்ப சந்தோஷம்பா, நல்லா வருவ’னு வாழ்த்தினாங்க. கொஞ்சம் கொஞ்சமா நான் வளர்ந்தேன். சம்பாதிச்சதை எல்லாம் தொழில்லயே முதலீடா போட்டேன். நகைகள் தரத்துல எந்தக் குறையும் இருக்கக் கூடாதுங்கறதுல உறுதியாக இருந்தேன். `வயர் டிராயிங்’ ஜாப் ஒர்க்ல சில பிரச்சினைங்க வந்தது. இதனால, நாமே சொந்தமா தங்கம் கம்பி இழுக்கற பட்டறை தொடங்கலாம்னு முடிவு செஞ்சேன். 1985-ல முதல் கடை தொடங்கினேன். அடுத்து `டையிங் ஷாப்’ ஆரம்பிச்சு, விதவிதமான டைகளை செய்யத் தொடங்கினேன். அதுக்கப்புறம் கட்டிங், பாலிஷிங்னு தொழிலை விரிவுபடுத்தினேன்.

நவீனத் தொழில்நுட்பம்!

அந்த சமயத்துல, பாம்பேல நவீனத் தொழில்நுட்பம் மூலம் மேக்ரோ வயர் டிராயிங், எனாமல்னு செஞ்சாங்க. அந்த தொழில்நுட்பத்தையும் கோயம்புத்தூருக்கு கொண்டுவந்தேன். இதனால், என்னோட நகைகள் தரம், டிசைன்னு எல்லாமே சிறப்பாக இருந்தது. இதையடுத்து, நிறைய ஆர்டர்கள் வந்தது. என்னோட கெபாசிட்டியைக்

காட்டிலும், நிறைய ஆர்டர்கள் வந்தது. அத்தனையும்  சமாளிச்சி, சிறப்பா செஞ்சிக் கொடுத்தேன்.

இதுக்கு நடுவுல, நகை செய்யறவங்க சரியா செய்யலை. தாமதம் செஞ்சாங்க. `எந்தக் காரணத்துக்காகவும் நம்ம பேரை கெடுத்துக்கக்கூடாது. கொஞ்சம் இயந்திரமயமாக்கலுக்கு மாறலாம்னு முடிவுசெஞ்சேன். நிறைய நகைக் கண்காட்சிகளுக்குப் போய், நகை தயாரிப்பு இயந்திரங்கள் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். 1991-ல பல இயந்திரங்கள் வாங்கி, நகைகளை செய்யத் தொடங்கினேன். ஆனா, என்னோட துரதிருஷ்டம். இந்த திட்டம் தோல்வியடைந்தது. அடுத்த என்ன செய்யலாம்னு யோசிச்சேன்...

கொட்டிக் கொடுத்தாலும் தரத்தில் சமரசம் கிடையாது!

கே.சீனிவாசனின் மகனும், எமரால்டு நிறுவனத்தின் இயக்குநருமான தியான் சீனிவாசன், பிளஸ் 2 சின்மயா இன்டர்நேஷனல் பள்ளியிலும், இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி.யும், அமெரிக்காவில் உள்ள தெற்கு ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் (தொழில்முனைவோர்) பயின்றுள்ளார். சிறந்த கால்பந்து வீரரான இவர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக எமரால்டு நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். “அமெரிக்காவுல கொஞ்ச நாள் இருந்து புதிய தொழில்நுட்பம், மேற்கத்திய கலாச்சாரம்னு நிறைய விஷயங்களை கத்துக்க நெனச்சேன். இந்த சமயத்துல, அங்க பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்புக் கிடச்சது. அங்க கொஞ்ச நாள் இருந்தேன். அதேசமயம், அமெரிக்கா ஏற்கெனவே வளர்ச்சியடைந்த நாடுங்கறதுனால, வளர்ச்சி விகிதம் குறைவாத்தான் இருக்கும். வளர்ந்து வர்ற இந்தியாவுல வளர்ச்சி விகிதம் அதிகம். தொழில்வாய்ப்புகளும் அதிகம். அதனால, இந்தியா திரும்பி, அப்பாவோட சேர்ந்து பணியாற்றுகிறேன்.

ஆரம்பத்துல அப்பா கஷ்டப்பட்டாலும், தன்னோட குழந்தைகள் நல்லா இருக்கனும்னு எல்லா வசதியும் செஞ்சிக் கொடுத்தார். நல்ல கல்வி கொடுத்தார். அவருக்கு எத்தனையோ பிரச்சினைங்க இருந்தாலும், அதை எங்ககிட்ட காட்டவே மாட்டார். இதனால, நான் நிறைய ஆண்டுகள் ஹாஸ்டல்ல இருந்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையையும், சுயசார்பையும் கொடுத்தது. அப்பாதான் என்னோட முதல் ரோல்மாடல். அதேசமயம், நல்ல விஷயம் யார் சொன்னாலும், கேட்டுக்கணும்ங்கறது என்னோட கொள்கை.

சின்ன வயசுல இருந்தே அப்பா சொன்னது ஒண்ணுதான். நாணயம், நேர்மையோட, தரமான பொருளை மட்டுமே கொடுக்கனும்னு சொல்லுவார். எத்தனை கோடி கொடுத்தாலும், நகையோட தரத்துல சமரசம் செய்யவே மாட்டார். இதையே நாங்களும் கடைப்பிடிக்கணும்னு சொல்லுவாரு. இன்னும் எத்தனை நூறாண்டானாலும் எமரால்டு நிறுவனத்தோட கொள்கைகள் மாறாது.

கடந்த 35 ஆண்டுகளாக மார்க்கெட்ல இருந்தாலும், கொஞ்ச வருஷமாகத்தான் சில்லறை விற்பனையில இறங்கியிருக்கோம். நேரடியாக நுகர்வோரை சந்திக்கிறோம். பாம்பே, டெல்லினு போனால், அப்பாவோட செல்வாக்கு பிரமிக்க வைக்கும். இதுக்குக் காரணம் அவரோட நேர்மை. தப்பா தொழில் செய்யனுமுன்னு நெனச்சா, அன்னிக்கே அழிவு தொடங்கிடும். மக்களோட நம்பிக்கையை என்னைக்கும் இழக்கக்கூடாதுனு அப்பா அடிக்கடி சொல்வார். அதுவே எமரால்டு நிறுவனத்தோட ஒட்டுமொத்த கொள்கை. கடைசி வரை இது மாறவே மாறாது” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x