Published : 08 Mar 2019 10:01 AM
Last Updated : 08 Mar 2019 10:01 AM

பிராணிகளிடம் கருணை காட்டுங்க.. `நாரி சக்தி புரஸ்கார்’ விருது பெறும் மினி வாசுதேவன்!

வாழும் உரிமை மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, பிராணிகள், தாவரங்களுக்கும் உண்டு. இந்தப் புரிதல் இருந்தால் நாம் பிராணிகளை துன்புறுத்த மாட்டோம். எந்தப் பிராணியும் தேடி வந்து மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மனிதர்கள் மீதான பயமும், சீண்டலும்தான் அவற்றின் சீற்றத்துக்கு காரணம். வாயில்லா ஜீவன்களை வதைப்பதை நிறுத்திக் கொண்டு, அவற்றை கருணையுடன் அணுகுவோம்” என்கிறார் கோவையைச் சேர்ந்த மினி வாசுதேவன் (54). இவருக்கு டெல்லியில் இன்று (மார்ச் 8) நடைபெறும் சர்வதேச மகளிர் தின விழாவில்  `நாரி சக்தி புரஸ்கார்’ விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

“பூர்வீகம் கேரள மாநிலம் திருவனந்தபுரம். பெற்றோர் வாசுதேவன்-நிர்மலா தேவி. திருவனந்தபுரம் கழகுட்டம் பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் அப்பா ஆசிரியர். பிளஸ் 2 வரை அங்கு பயின்ற நான், திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் பயின்றேன். கல்லூரிப் படிப்பு முடித்த பின்னர், பொங்களூரு பெல் நிறுவனத்தில் 1987 முதல் 1991 வரை ப்ராஜெக்ட் இன்ஜினீயராகப் பணிபுரிந்தேன்.

பின்னர், அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் `மாஸ்டர் இன் இன்ஜினீயரிங்’கும், முனைவர் பட்டமும் பெற்றேன். அங்குள்ள நார்டெல் நெட்வொர்க்ஸ் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். என்னுடனேயே படித்து, அமெரிக்காவில் இன்ஜினீயராகப் பணிபுரிந்த மதுகணேஷுடன் 1993-ல் திருமணம். இருவரும் 2004-ல் கோவைக்கு பணி மாறுதல்பெற்று வந்துவிட்டோம். கடந்த 15 ஆண்டுகளாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறோம்.

மனிதநேய விலங்குகள் அமைப்பு

சிறு வயது முதலே பிராணிகளை நேசிப்பேன். சாலையில் அடிபட்டுக் கிடக்கும் நாய், பூனையைப் பார்க்கும்போது, வேதனையாக இருக்கும். அடிபடும் தெருநாய்களைப் பிடித்து வந்து, மருத்துவம் செய்வது, ஆதரவற்ற பிராணிகளுக்கு உணவளிப்பது என முடிந்த அளவுக்கு பிராணிகளின் நலனுக்காக செயல்பட்டோம். பிராணிகளின் பாதுகாப்புக்காக எந்தவித அமைப்புகளும் இல்லாமல் இருந்தது உறுத்தலாக இருந்தது. 2006-ல் மனிதநேய விலங்குகள் அமைப்பு (ஹியூமன் அனிமல் சொசைட்டி) என்ற அமைப்பைத் தொடங்கினோம். பிராணிகள் மீது ஆர்வம் கொண்ட சிலரும் இந்த அமைப்பில் இணைந்தனர்.

இந்த நிலையில்தான், தெரு நாய்களுக்கு கருத்தடை மையங்களைத் தொடங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது. கோவை மாநகராட்சி சார்பில் சீரநாயக்கன்பாளையத்தில் கருத்தடை மையத்தைத் தொடங்கினர். இதையடுத்து, மாநகராட்சியை அணுகி, பிராணிகள் பராமரிப்பில் எங்களுக்குள்ள ஆர்வத்தை தெரிவித்து, அவர்களுடன் இணைந்து செயல்பட அனுமதி கேட்டோம். இதையடுத்து, மாநகராட்சியும், மனிதநேய விலங்குகள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

இது, பிராணிகளுக்கான சிகிச்சை, நலம் பேணுதல் உள்ளிட்ட விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல உதவியாக இருந்தது. நாய்களுக்கான கருத்தடைகளில் ஈடுபட்டதுடன், அடிபடும் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளுக்கான சிகிச்சைகளையும் மேற்கண்டோம். பிராணிகளை தத்துக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டோம். படிப்படியாக இந்தப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றினோம். மக்களுடன் இணைந்து செயல்படும் விஷயங்கள்தான் வெற்றியைத் தேடித் தரும் என்பதில் உறுதியாக இருந்தோம். பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது, நோய்வாய்ப்பட்ட பிராணிகளுக்கு சிகிச்சை, விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டோம்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு

2015 முதல் ஏராளமான பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, பிராணிகள் நலம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டோம். பிராணிகளை வளர்க்கும் முறை, தெரு விலங்குகளை நடத்த வேண்டிய முறை, வெறிநாய் தடுப்பூசி  போடுவது, விபத்தில் அடிபடும் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விஷயங்களை மாணவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உதவியுடன் வீடு வீடாகச் சென்றும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டோம்.

நாய்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டியது அவசியமாகும். இது நாய்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் அவசியமானதாகும். இதையொட்டி, தெரு நாய்களுக்கான தடுப்பூசி முகாம்களை  நடத்தினோம்.

குப்பை கொட்டுவதே காரணம்...

நாய்கள் தொல்லை என்று நிறைய பேர் சொல்லுவார்கள். உண்மையில் அது நாய்கள் தொல்லை அல்ல. மனிதர்களின் பிரச்சினைதான். நிறைய இடங்களில் நாம் குப்பை கொட்டுகிறோம். சாலையோரம் உள்ள கறிக் கடைகள், இறைச்சிக் கழிவுகளை அதிக அளவில் குப்பைகளில் கொட்டுகின்றன. இதனால், நாய்களுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது. இது நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. சுத்தமாக இருக்கும் பகுதிகளில் நாய்கள் இருக்காது. இவ்வாறு பிராணிகளின் நலமும், மக்கள் நலமும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை.

இந்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தினோம்.

மனிதர்கள் மீதான பயத்தால்தான் நம்மை நோக்கி நாய்கள்  பாய்கின்றன. குட்டி போட்ட நாய்கள் அருகில் நாம் போகவே கூடாது. சாப்பிடும் நாயையும் தொந்தரவு செய்யக்கூடாது. வீடுகளில் பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல், நாய்களுக்கிடையே குழந்தைகளை விடக்கூடாது. நாயின் வாலைப் பிடிப்பது, சீண்டுவது போன்றவற்றால்தான் வீட்டு நாய்கள்கூட நம்மைக்  கடிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்து, நாயைக் கொல்வது, விரட்டிவிடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறோம். நாயைப் பார்த்தால் கல்லெடுத்து வீசுவது, தேவையின்றிச் சீண்டுவது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

உண்மையில், நாய்கள் நம்மைப் பாதுகாக்கின்றன. நாய்கள் இருக்கும் பகுதியில் திருடர்கள் தொல்லை இருக்காது. இது புரியாமல், நாய்களை வெறுக்கிறோம். இந்தியாவில், வெளிநாட்டு வகை நாய்களை வளர்ப்பது தேவையற்றது. நம் மண்ணுக்கு ஏற்ற, நாட்டு நாய்களை வளர்ப்பதுதான் சரியானது. பணத்துக்காக வெளிநாட்டு நாய்களை விற்பனை செய்வதும், பெருமைக்காக வாங்குவதும் தவறான விஷயங்கள்.

கோவை வழுக்குப்பாறை பகுதியில், எங்கள் அமைப்பு சார்பில் ஒன்றரை ஏக்கர் பகுதியில் பிராணிகள் காப்பகம் நடத்தி வருகிறோம். நான், கணவர், 2 அறக்கட்டளை நிர்வாகிகள், 2 உறுப்பினர்கள் என 6 பேர் கொண்ட குழு, இந்தக் காப்பகத்தைப் பராமரித்து வருகிறோம்.  அங்கு 50 நாய்கள், 10 பூனைகள், ஒரு குதிரை, ஒரு மாடு உள்ளிட்டவற்றைப் பராமரிக்கிறோம். இவற்றில் பெரும்பாலானவை ஊனமுற்றவை.  பிறரால் தத்து எடுக்கப்படாதவை.

தற்போது, மத்திய அரசு `நாரி சக்தி புரஸ்கார்’ விருது அறிவித்துள்ளது, ஒட்டுமொத்தமாக எங்களது அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். பிராணிகள் நலன் தொடர்பாக மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வையே உண்மையான விருதாகக் கருதுகிறோம்” என்றார் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x