Published : 27 Mar 2019 08:56 AM
Last Updated : 27 Mar 2019 08:56 AM

வெளிச்சத்தை எதிர்நோக்கும் திருநங்கைகள்!- வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயிற்சி அளித்த ஸ்வஸ்தி!

திருநங்கைகளா...தவறான செயல்களில் ஈடுபடுவார்கள், ரயில், பஸ்களிலும், பொதுஇடங்களிலும் கையேந்துவார்கள் என்றெல்லாம் கூறி, அவர்களுக்கு வீடு கூட கொடுக்காமல் புறந்தள்ளும் சமூகத்தில், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சமையல் கலை தொடர்பான சிறப்பு பயிற்சி அளித்து, அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் உதவுகிறது `ஸ்வஸ்தி ஹெல்த் கேட்டலிஸ்ட்’ என்ற தன்னார்வ அமைப்பு.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவில் 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள, பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் 32 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தியாவில் 14 மாநிலங்களிலும், தமிழகத்தில் 16 மாவட்டங்களிலும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை சமூக, பொருளாதார அமைப்பில் நலிவுற்றோருக்காக பல்வேறு சேவையாற்றும் இந்த அமைப்பு, கோவை மாவட்டத்தில் 2014-ம் ஆண்டு முதல் நலிவடைந்த பிரிவினர், தொழிற்சாலைப் பணியாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், குழந்தைகளின் நலனுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் கோவை மாவட்ட திருநங்கை அமைப்புடன், ஸ்வஸ்தி அமைப்பு இணைந்து செயல்படுகிறது.

சமூக, பொருளாதார பாதுகாப்பு!

இது தொடர்பாக `ஸ்வஸ்தி ஹெல்த் கேட்டலிஸ்ட்’ அமைப்பின் மாநில நிர்வாகி கே.ஜெயகணேஷை சந்தித்துப் பேசினோம். “திருநங்கைகளின் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென முடிவு செய்தவுடன், கோவை மாவட்டத்தில் இது தொடர்பாக கணக்

கெடுப்புகளில் ஈடுபட்டோம். ஏறத்தாழ 1,500-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருப்பதும், 50 சதவீதம் பேர்கூட சமூகப் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் தெரியவந்தது. முதல்கட்டமாக, அவர்

களது அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை ஆராய்ந்தோம். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என அடையாளமே இல்லாமல் இருப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்தனர். இதையடுத்து, 2014-ம் ஆண்டு முதல் 2018-ம்

ஆண்டு வரை, அரசுடன் இணைந்து, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தருவது தொடர்பான முகாம்களை நடத்தினோம். இதில், 99 சதவீத திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், ரேஷன் கார்டு உள்ளிட்டவை பெற்றுத் தரப்பட்டன. அவர்களுக்கு பசுமை வீடுகள் பெற்றுத் தருவது தொடர்பாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்.

பாதிக்கும் மேற்பட்ட திருநங்கைகள், திருநம்பிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து, வங்கிகளுடன் இணைந்து, 100 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கிவைத்து, சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தோம்.

ஆராய்ச்சி மணி...

வன்முறை, மோசடியால் பாதிக்கப்படும் திருநங்கைகளுக்காக `ஆராய்ச்சி மணி’ என்ற குழுவைத் தொடங்கி, காவல் துறை, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் உதவினோம். கோவை ரயில் நிலையத்தில் 3, 4 இளைஞர்கள் சேர்ந்து, ஒரு திருநங்கையை கடுமையாகத் தாக்கினர். திருநங்கைகளுக்குள் கலவரம் என

இதை முடிக்கப் பார்த்தார்கள். காவல் துறையிடம் முறையிட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் செய்தோம். தொடர்ந்து, தலைமைப் பண்பு, தகவல் தொடர்பு திறன் வளர்ப்பு, நேர மேலாண்மை,முடிவெடுக்கும் திறன் வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை அளித்தோம்.

பின்னர், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தோம். திருநங்கைகளில் சுமார் 200 பேர், சமையல் வேலைக்குச் சென்றும், திருமணம், காதுகுத்து உள்ளிட்ட விசேஷங்களுக்கு ஆர்டரின்பேரில் உணவுப் பொருட்களை செய்துகொடுத்ததும் தெரியவந்தது. குறிப்பாக, பிரியாணி தயாரிப்பில் பலர் ஈடுபட்டிருந்தது ஆய்வில் தெரிந்தது.

இதுகுறித்து மேலும் விசாரித்தபோது,  விசேஷ நாட்களில் மட்டும் வருவாய் கிடைப்பதாகவும், மற்ற நாட்களில் பொதுஇடங்களில் வசூலித்துத்துத்தான் வாழ்க்கையை நடத்துவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, 50 திருநங்கைகளைத் தேர்வு செய்து, இரு கட்டங்களாக உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தோம்.

இதற்கான நிதியுதவிக்காக, நபார்டு வங்கியை அணுகினோம். மேலும், பயிற்சிக்காக கோவை சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரியை நாடினோம். இரு தரப்புமே ஒப்புக் கொண்டதால், பயிற்சி தொடங்கியது.

அக்கல்லூரியின் கேட்டரிங் துறை சார்பில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, இனிப்பு தயாரிப்பு, உணவுப் பொருட்களைப் பதப்படுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள், அளிக்கப்பட்டன.

 கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கியஇப்பயிற்சி முகாம், இரு பிரிவுகளாக நடைபெற்று, அண்மையில் முடிவுபெற்றது.

இதில் பங்கேற்ற திருநங்கைகள், மிகுந்த ஆர்வத்துடன் உணவுப் பொருட்களைத் தயாரிக்க கற்றுக் கொண்டனர். அடுப்பில் பாத்திரத்தை வைப்பது தொடங்கி, என்னென்ன பொருட்கள் பயன்படுத்த  வேண்டும், எவ்வளவு நேரம் சமைக்க வேண்டுமென அனைத்தையும் குறிப்பு எடுத்துக் கொண்டு, செயல்முறை பயிற்சி பெற்றனர்.

திருநங்கைகள் தாங்களே ஒரு நிறுவனத்தை தொடங்கி, பொருளாதார ரீதியாக வலுப்பட வேண்டுமென்பதே இதன் நோக்கம். எனவே, அவர்கள் உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை  தொடங்கவும் உதவத் திட்டமிட்டுள்ளோம். கோவை சி.எஸ்.ஐ. திருச்சபை இடம்கொடுக்க முன்வந்துள்ளது. நிதியாதாரம் கிடைத்தவுடன், முதல் யூனிட் அமைக்கப்படும். வரும் ஏப்ரல் 15-ம் தேதி உலக திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதற்குள் முதல் யூனிட்டை அமைக்க முயற்சித்து வருகிறோம்.

பொதுவாகவே, திருநங்கைகள் மீதான கண்ணோட்டம் மாற வேண்டும். அவர்கள் சமுதாயத்துடன் இணைந்துவாழும் போதுதான், தற்போதுள்ள கண்ணோட்டம் மாறும். ஏற்கெனவே, மதுரையில் திருநங்கைகளுக்கு கிராமியக் கலை பயிற்சியும்,  நாமக்கல்லில் ஆடு, மாடு வளர்ப்பு பயிற்சியும் அளித்துள்ளோம்.

தற்போது உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி பெற்றுள்ள திருநங்கைகளுக்கு,  அவற்றை சந்தைப்படுத்தவும்  உதவ உள்ளோம்.  மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், தரமான, திருப்தியான உணவு வழங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளோம்.  பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இனி, அவர்களது பாதை மாறும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறுவார்கள்” என்றார் ஜெயகணேஷ் நம்பிக்கையுடன்.

தொழில்முனைவோராக மாறுவதே லட்சியம்...

கோவை  தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த திருநங்கை ரக்சிதா (27) கூறும்போது, “நான் 8-ம் வகுப்பு படித்துள்ளேன். திருமணம் மற்றும் விசேஷங்களுக்குச் சென்று, 10, 20 மற்றும் 50 கிலோ வரை பிரியாணி செய்து கொடுப்பேன். அளவு அதிகரிக்கும்போது, உதவியாட்களை வைத்துக்கொள்வேன். ஆனாலும், பெரும்பாலான நாட்கள் வேலை இருக்காது.

இதனால்தான் வயிற்றுப் பிழைப்புக்காக கலெக்‌ஷனுக்குச் செல்ல வேண்டியிருந்தது. பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற முகாமில், கேக், பிஸ்கெட், சூப் குச்சி, சாண்ட்விச் உள்ளிட்டவை தயாரிக்க கற்றுக்கொண்டேன். இவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்தை அமைத்து, தொழில்முனைவோராக வேண்டுமென்பதே எனது லட்சியம்” என்றார். கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த எம்.தாரா(28) கூறும்போது, “விசேஷங்களுக்கு சமையல் செய்ய செல்கிறேன். பிரியாணி, சாதம், குழம்பு என வழக்கமான உணவுப் பொருட்கள் மட்டும் தயாரிக்கத் தெரியும். பெரும்பாலான நாட்களில் வேலை இல்லாததால், வசூலுக்குச் செல்வோம். வாழ்வாதாரம் இல்லாததால்தான்,  பாலியல் தொழிலுக்குச் செல்வதாகக்கூட சில திருநங்கைகள் சொல்வார்கள். இந்த நிலை மாற வேண்டுமென்பதில் எல்லோருமே உறுதியாக இருக்கிறோம். சமூகத்தில் மற்றவர்களைப்போல உழைத்து, கவுரவமாக வாழ வேண்டுமென எங்களுக்கும் ஆசை உள்ளது. தற்போது தொழில் தொடங்க வாய்ப்புக் கிடைத்தால், முழு ஈடுபாட்டுடன் உழைத்து, எங்களை பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்வோம். அதற்குப் பிறகாவது, இந்த சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம்” என்றார் நெகிழ்வுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x