Published : 18 Mar 2019 11:53 AM
Last Updated : 18 Mar 2019 11:53 AM

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு: தமிழக அரசின் வக்கிரச் செயல்; இரா.முத்தரசன் கண்டனம்

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவரை இடித்ததற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி புத்தூரில், பெரியாரால் தொடங்கப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவரை தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ள வக்கிரம் நிறைந்த செயலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

பெரியாரின் வழிவந்த கட்சி என தனக்குத் தானே அறிவித்துக் கொண்டு, பெரியாரின் படத்தைப் பயன்படுத்தி வரும் கட்சி அதிமுகவாகும்.

அதிமுக அரசிடம் சலுகை கோரவில்லை - மாறாக சட்ட ரீதியாக பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது தவறல்ல என்று கருதுகின்றோம்.

தஞ்சை நகரத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த திறந்த வெளி சிறைச்சாலைக்கான 54 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனமான சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதை, உடனடியாக அரசு மீட்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும்  இதுவரை அரசு மீட்கவில்லை.

ஆனால், பெரியாரால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் சுற்றுச்சுவரை கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டிருந்த நிலையில் திடீர் என இடித்து தரைமட்டமாக்கியிருப்பது, அரசின் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

முழு விசாரணை மேற்கொண்டு சர்வேயர் வைத்து சட்டப்படி நிலத்தினை சர்வே செய்ய மறுத்து, சுற்றுச்சுவர் இடிக்கப்பட காரணமாய் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துவதுடன், மீண்டும் சுற்றுச்சுவரை அரசே கட்டிக் கொடுத்திட வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x