Published : 29 Mar 2019 07:10 AM
Last Updated : 29 Mar 2019 07:10 AM

வருவாயைப் பெருக்க மாற்றுவழியை ஆராயாமல் அரசே மது விற்பனையில் ஈடுபடுவது வேதனையானது: உயர் நீதிமன்றம் கருத்து

வருவாயைப் பெருக்குவதற்கு மாற்று வழிகளை ஆராயாமல் அரசே மது விற்பனையில் ஈடுபடுவது வேதனை யானது என உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

மதுரை- தேனி சாலையில் கருவேல நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தும் அருகே 10.9.2010-ல் அரசு பஸ் மோதி முருகன் (40) என்பவர் உயிரிழந்தார்.

இதையடுத்து இழப்பீடு கேட்டு முருகன் மனைவி அம்மாவசி, வீரமணி, வீரசாமி, சூர்யா, தனலெட்சுமி, தாயார் கதிரியம்மாள் ஆகியோர் பெரியகுளம் மோட்டார் வாகனத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் முருகனின் குடும்பத் துக்கு ரூ.5.69 லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு 23.4.2012-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. போக்கு வரத்து கழகம் சார்பில், ‘விபத்தில் இறந்த முருகன் டாஸ்மாக் கடையிலிருந்து மதுபானம் அருந்திவிட்டு வாகனம் வருவதைக் கவனிக்காமல் சாலையை கடக்கும்போது விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கு முருகனின் கவனக்குறைவே காரணம். இதற்கு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டது.

முருகன் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடும் போது, முருகன் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்தார். டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்ததை வைத்து அவர் குடித்திருந்தார் என்ற முடிவுக்கு வர முடியாது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முருகன் மது குடித்திருந்தார் எனக் குறிப்பிடவில்லை. இதனால் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு:

மதுபானம் எப்படி பல குடும்பங்களைச் சீரழிக்கிறது, விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் எப்படி மதுபானத்தால் பறிக்கப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு சாட்சியாக உள்ளது. பலர் போதையில் வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழப் பதும், காயமடைவதும் உண்மையாகும்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசே விற்பனை செய்யும் மதுபானங்களைக் குடித்து விட்டு பலர் உயிரிழக்கின்றனர். காயமடைகின்றனர். இதனால் அவர்களைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வருவாயைப் பெருக்குவதற்கு கூடுதல் வரி, புதிய வரி போன்ற மாற்று வழிகளை ஆராயாமல் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் அரசே மது விற்பனையில் ஈடுபடுவது வேதனையானது.

மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அரசின் கடமை. சாலை விபத்துகளில் 70 சதவீதம் மதுவாலும், போதையில் வாகனம் ஓட்டுவதாலும் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசப்பிதா மகாத்மா காந்தி தன் வாழ்நாள் முழுவதும் மது விலக்கை கடைப்பிடித்தார். அவரது கொள்கை களைப் பின்பற்றாமல் மகாத்மா காந்தியை தேசப்பிதா என்றழைப்பதில் அர்த்தம் இல்லை. இதனால் தமிழகத் தில் 1937 முதல் 1971 வரை அமலில் இருந்த மது விலக்கு மீண்டும் அமல் படுத்தப்படும் என நீதிமன்றம் நம்புகி றது.

இந்த வழக்கில் விபத்தில் இறந்த முருகன் குடும்பத்துக்கான இழப்பீடு நிர்ணயம் செய்வதில் தவறு நிகழ்ந்து உள்ளது. முருகன் குடும்பத்துக்கு ரூ.15,26,250 வழங்க வேண்டும். முருகனின் கவனக்குறைவுக்காக இழப்பீட்டு தொகையில் 15 சதவீதம் கழித்து ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

முருகனின் மனைவிக்கு ரூ.3.50 லட்சம், தாய்க்கு ரூ.1.50 லட்சம், மகன், மகள்களுக்கு தலா ரூ.2 லட்சம் 4 வாரங்களில் வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகைக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x