மின் சேமிப்பு முறை ரத்தாக வாய்ப்பு: காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் விலை நிர்ணயம்

மின் சேமிப்பு முறை ரத்தாக வாய்ப்பு: காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் விலை நிர்ணயம்
Updated on
1 min read

காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் மின் துறை தொடர்பானவர்கள், ஒரு மாதத்தில் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த மே மாத கணக்கெடுப்பின்படி, மொத்தம் 12909 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, மின் வாரியத்தால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் தமிழக அனல் மின் நிலையங்கள் 4,660 மெகாவாட், மத்திய மின் நிலையங்கள் மூலம் 4,177 மெகாவாட், நீர் மின் நிலையங்கள் மூலம் 2,284 மெகாவாட், எரிவாயு மூலம் 516 மெகாவாட், தனியார் மின் நிலையங்கள் மூலம் 1154 மெகாவாட், சூரிய சக்தி மூலம் 107 மெகாவாட், காற்றாலைகள் மூலம் 7,262 மெகாவாட், உயிரிக் கழிவு மூலம் 211 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 659 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவற்றில், காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மின் வாரியம் வாங்குவதற்கான கொள்முதல் விலை நிர்ணய உத்தரவு, கடந்த ஜூலையுடன் முடிந்தது. இந்நிலையில் புதிய விலை நிர்ணயம் குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, காற்றாலை மின்சாரத்துக்கான சேமிப்பு முறைத் திட்டத்தை நீக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் சார்பில் காற்றாலை அதிபர்களுக்கு பணம் செலுத்துவதற்கான காலக்கெடு 30 நாட்களிலிருந்து, 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரத்தின் புதிய கொள்முதல் விலையாக ரூ.3.59 உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உயிரிக்கழிவு மின்சாரத்துக்கான விலை, யூனிட்டுக்கு முதல் ஆண்டுக்கு ரூ.5.47 ஆகவும், இரண்டாம் ஆண்டுக்கு ரூ.5.67 ஆகவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளின் கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு, முதல் ஆண்டுக்கு ரூ. 4.74 என்றும், அடுத்த ஆண்டுக்கு ரூ.4.90 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண நிர்ணயம் குறித்து, பொதுமக்கள், மின் உற்பத்தியாளர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அமைப்பு கள் வரும் அக்டோபர் 27-ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகத்துக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், காற்றாலைகளுக்கான மின் சேமிப்பு முறை, காற்றாலை முதலீட்டை அதிகரிக்கவும், ஊக்கப்படுத்தவும், தொழில் நிறுவனங்களுக்கு சலுகையாக கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை ரத்தாக வாய்ப்புள்ளதால், பாதிக்கப்படும் தொழிற்துறையினர் சட்டரீதியாக அதை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in