Published : 30 Mar 2019 03:04 PM
Last Updated : 30 Mar 2019 03:04 PM

கனிமொழி ஆரத்திக்குப் பணம் கொடுத்த காணொலிக் காட்சி; தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பணம் கொடுத்தாலும் நடவடிக்கைதான்: இன்பதுரை எம்எல்ஏ விநோத விளக்கம்

கனிமொழிக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்குப்  பணம் கொடுத்த விவகாரத்தில் எப்போது பணம் கொடுத்தாலும் அது விதிமீறல்தான் என இன்பதுரை எம்எல்ஏ விநோத விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான இன்பதுரை தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் கனிமொழி ஆரத்தி எடுத்த பெண்களுக்குப் பணம் கொடுத்த காணொலி ஒன்றை அளித்து நடவடிக்கை கோரி புகார் அளித்தார். அதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள் அது பழைய வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் கிராம சபைக் கூட்டத்திற்குச் சென்றபோது எடுத்தது என்று தெரிவித்தனர்.

இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர் சரி, நான் வந்து புகார் அளித்தேன் என்றாவது செய்தியை போடுங்கள் என கூறிவிட்டுச் சென்றார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த புகாரை சீரியஸாக எடுத்துக்கொண்டது. தேர்தல் ஆணையப் புகாரின் பேரில் போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன் திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் நடந்த சம்பவம் இது என நேற்று திருச்செந்தூர் எம்எம்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில் புகார் அளித்த அதிமுக எம்எல்ஏ இன்பதுரை நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கனிமொழியின் பழைய வீடியோ மீது புகார் அளித்து குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு வினோதமான பதில் ஒன்றை இன்பதுரை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''நேற்று புகார் கொடுத்த அனிதா ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவில் இருப்பது நாங்கள் இல்லை என கூறவில்லை. பணம் கொடுக்கவில்லை என்றும் கூறவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு முன் நடந்த சம்பவம் என்றால் கூட கையூட்டு கையூட்டு தான்.

எனவே, கனிமொழி தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். எனவே அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். திமுக சின்னத்தை முடக்க வேண்டும். கனிமொழி மீது உறுதியான நடவடிக்கை தேவை. பறக்கும் படை அதிகாரி புகார் கொடுத்த பின்பு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார்.

இன்பதுரையின் புதிய விளக்கத்தால் செய்தியாளர்கள் திகைத்துப்போயினர்.

அப்படியானால் கனிமொழி மீது புகார் கொடுத்த வழக்கில் உங்களை இணைத்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேவையெனில் இணைத்துக் கொள்வோம் என்றார்.

பின்னர் பேசிய அவர், ''18 எம்எல்ஏக்கள் வழக்கில் நீதிமன்றத்தை சரிகட்டி தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்று தேனி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். நீதிமன்றத்தை அவமதித்து பேசிய ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு தொடர இருக்கிறோம்'' என இன்பதுரை தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x