Published : 18 Mar 2019 10:13 AM
Last Updated : 18 Mar 2019 10:13 AM

அண்ணா, எம்ஜிஆர் நினைவிட பணியாளர் நியமன ஆணையில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

அண்ணா, எம்ஜிஆர் நினைவிட பணியாளர் நியமன ஆணையில் தமிழ்மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு இடங்களில் துப்புரவு, தோட்ட பராமரிப்பு, பிளம்பர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு 54 பேரை நியமனம் செய்ய செய்தி மக்கள் தொடர்புத்துறை தனியாரிடம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள இந்தப் பணிகளுக்கான நிபந்தனைகளை அந்த அறிவிப்பில் அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தக் கடிதங்கள், ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே இருக்க வேண்டும் என்றும், அவை தமிழில் இருந்தால் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு மொழி பெயர்த்து அளிக்காத டெண்டர் ஆவணங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள ஒப்பந்தத்திற்கான ஆவணம் தமிழ் மொழியில் இருந்தால் நிராகரிக்கப்படும் என அதிமுக அரசு குறிப்பிட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு இடங்களில் பணியாற்றுவதற்கான ஒப்பந்த ஆவணங்களில்கூட தமிழ் மொழி முழுமையாகப் புறக்கணிக்கப்படுகிறது என்பது வெட்கக்கேடு ஆகும்.

அரசின் இந்த அறிவிப்பு திருத்தம் செய்யப்பட்டு, தமிழ் மொழியிலேயே இந்தப் பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்புகள் அமைந்திடவும், தமிழ் மொழியிலேயே ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உடனடியாக மறு அறிவிப்பு செய்திட வேண்டும்.

தமிழ்த் தாயின் தலைமகன் அண்ணா பெயரில் கட்சி நடத்தக்கூடிய அதிமுக ஆட்சியின் தமிழ்மொழி அழிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு ஆகிய அநீதிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் கிளர்ந்து எழுந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி" என, வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x