காவல்துறை சிசிடிவி கேமரா பொருத்த ரூ. 1.5 லட்சம் சேமிப்புப்பணத்தை அளித்த சிறுமி: கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

காவல்துறை சிசிடிவி கேமரா பொருத்த ரூ. 1.5 லட்சம் சேமிப்புப்பணத்தை அளித்த சிறுமி: கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு
Updated on
1 min read

சென்னை முழுதும் கண்காணிப்புக்கேமரா பொருத்த முயற்சி எடுத்துவரும் சென்னை காவல்துறைக்கு உதவும் வகையில் தனது சேமிப்புப்பணம் 1.5 லட்சத்தை அளித்த சிறுமியை காவல ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை முழுதும்  சிசிடிவி கேமராக்கள் பொருத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் முடிவெடுத்து அதை செயல்படுத்தி வருகிறார். இதற்கு பல நிறுவனங்கள் நல் உள்ளங்கள் உதவியும் செய்கின்றனர். சென்னை முழுதும் சிசிடிவி பொருத்தப்படுவதால் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்துள்ளது.

குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு அஞ்சும் வகையில் சிசிடிவி கேமராக்கள் சென்னை முழுதும் பொருத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் பயமின்றி நிம்மதியாக செல்ல முடிகிறது. பொதுமக்களிடையே இத்திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காவல் ஆணையரின் இந்த முடிவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் தனது சேமிப்புப்பணத்திலிருந்து ரூ1.5 லட்சம் பணம் கொடுத்து உதவிய சிறுமி ஸ்ரீஹிதாவை காவல் ஆணையாளர் பாராட்டினார்

சென்னை, காட்டுபாக்கம், ஜாஸ்மின் கோர்ட் என்ற முகவரியில் வசிப்பவர் சத்யநாராயணன். இவரது மகள் ஸ்ரீஹிதா (9) 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீஹிதா சில வாரங்களுக்கு முன்னர் ராயப்பேட்டையிலுள்ள தனது தந்தை சத்யநாராயணாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு காவல்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கலந்தாய்வு மேற்கொண்டிருந்தனர்.

அப்போது இதனைக் கண்ட சிறுமி ஸ்ரீஹிதா தனது சேமிப்பிலிருந்து சிசிடிவி கேமரா பொருத்த பணம் தருவதாக கூறினார். இந்நிகழ்வை கண்ட காவல் அதிகாரிகள் சிறுமியை பாராட்டிவிட்டு சென்றனர். ஆனால், சில நாட்களில் மேற்படி சிறுமி ஸ்ரீஹிதா தனது தந்தையுடன் காவல் அதிகாரிகளை சந்தித்து, தனது சேமிப்பு பணத்திலிருந்து ரூ.1,50,000/- பணத்தை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சிறுமியிடம் விசாரித்தபோது, சிசிடிவி கேமராவால் காவல்துறையில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தனது தந்தை கூறியதாகவும், ஆகவே, காவல்துறைக்கு தன்னால் முடிந்த தனது சேமிப்பிலிருந்த ரூ.1.5 லட்சம் பணத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.

மேற்படி சிறுமியின் உதவும் மனப்பான்மை குறித்து கேள்விப்பட்ட சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விசுவநாதன், இன்று சிறுமி ஸ்ரீஹிதாவை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். உடன் சிறுமியின் தந்தை சத்யநாராயணா மற்றும் சகோதரன் யதின் ஆகியோர் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in